அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரு பெரும் சுதந்திரப் போராட்ட தலைவர்களில் ஒருவரான மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்று 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், மற்றொரு தலைவரான சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையும் நினைவுகூரும் வகையில், நடப்பு ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாட்டு கூட்டம் அகமதாபாத்தில் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதன்படி இன்று (ஏப். 8) அகமதாபாத்தில் தொடங்கிய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளையும் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு இன்று காலை சோனியா காந்தி புறப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள், காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என நாடு முழுவதிலுமிருந்து 3,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ‘காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய ஆளுமைகளாக விளங்கிய மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் படேல் ஆகியோரின் மரபுகளுக்கு காங்கிரஸ் மரியாதை செலுத்துகிறது.
ஒன்றிய அரசு அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற வழிமுறைகளையும் ஆட்சியாளர்கள் சீர்குலைத்துவிட்டார்கள். இதுகுறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். ஒன்றிய அரசுக்கு நீதிக்கான பாதையைக் காட்ட, காங்கிரஸ் கட்சி இந்த தேசிய அளவிலான கூட்டத்தை நடத்துகிறது’ என்றார். இரண்டு நாள் நிகழ்ச்சிகள் குறித்து தெரிவித்துள்ள குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மணீஷ் தோஷி, ‘இன்று கட்சியின் உச்ச கொள்கை வகுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஷாஹிபாக்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சர்தார் ஸ்மாரக்கில் கூடியது.
மாலை 5 மணிக்கு, மகாத்மா காந்தியின் சுதந்திர இயக்கத்தின் அடையாள மையமான சபர்மதி ஆசிரமத்தில் புனித பிரார்த்தனைக் கூட்டத்திற்காக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது.
The post சோனியா, ராகுல், பிரியங்கா பங்கேற்கும் குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூடியது: நாடு முழுவதிலும் இருந்து 3,000 பிரதிநிதிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.