சென்னை,
ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்து கடந்த 29-ம் தேதி வெளியான படம் சொர்க்கவாசல். செல்வராகவன், கருணாஸ், நட்டி நட்ராஜ் , சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரிக்க சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், சொர்க்கவாசல் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சாலையோர உணவகம் நடத்தி வரும் ஆர்.ஜே. பாலாஜி, புதிதாக ஓட்டல் திறக்க வேண்டும், அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பல கனவுகளுடன் இருக்கிறார். அப்போது, போலீசாரால் கைது செய்யப்பட்டு செல்வராகவன் இருக்கும் சென்னை சிறைக்கு கொண்டு வரப்படுகிறார்.
ஆர்.ஜே. பாலாஜி ஏன் கைது செய்யப்பட்டார்? இதற்கும் செல்வராகவனுக்கு என்ன சம்பந்தம்?,ஆர்.ஜே. பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தாரா? என்பது மீதி கதை.
கடந்த 1999இல் சென்னை மத்திய சிறைச்சாலையில் நடக்கும் கலவரம், அதன் பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்படும் ஆணையத்தின் விசாரணை, என திரைக்கதை விளக்கப்படுகிறது.
இதுவரை நகைச்சுவை நாயகனாக மட்டுமே பார்த்து வந்த ஆர்.ஜே. பாலாஜி, முதல் முறையாக தனது புதுவிதமான நடிப்பை இப்படத்தில் வெளிக்காட்டியுள்ளார். சிறையில் அவர் படும் கஷ்டங்கள், சொல்லமுடியாத துன்புறுத்தல்கள், பயம், கோபம் என அனைத்து இடங்களிலும் அவர் நடித்த விதம் அருமையாக இருந்தது.
மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ரவுடியான செல்வராகவன் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்.ஜே. பாலாஜியின் காதலியாக வந்த சானியா அய்யப்பன் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். காவல் துறை அதிகாரியாக வரும் ஷெராபுதீன், இலங்கைத் தமிழர் கதாபாத்திரம் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.
அதே போல் இசை, பிஜிஎம், ஒளிப்பதிவு என அனைத்துமே ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ளன என்றே கூறலாம். முதல் பாதியை எமோஷனலாக எடுத்துள்ள இயக்குனர், இரண்டாம் பாதியில் சிறையில் நடக்கும் சில கொடூரங்களை காட்டியுள்ளார்.