சொத்து விற்பனை செய்ததில் தகராறு தம்பியை சரமாரி அடித்து கொன்ற அண்ணன் கைது: காஞ்சிபுரம் அருகே பயங்கரம்

3 months ago 18

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சொத்து விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறில், தம்பியை சரமாரி அடித்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், வேடல் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி (37). ஆட்டோ ஓட்டுநரான இவர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய தம்பி நேதாஜி (30). பெற்றோர் இல்லாததால் இவர்களுடனே தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

மேலும், நேதாஜிக்கு மதுபழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் சொத்து ஒன்று விற்பனை செய்த நிலையில், இது தொடர்பாக அவ்வப்போது அண்ணன், தம்பியிடையே தகராறு இருந்து வந்துள்ளது. வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அதிக மதுபோதையில் இருந்த நேதாஜி, அண்ணன் பாரதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றிய நிலையில் பாரதி தனது தம்பியை சரமாரியாக தாக்கியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த பாரதி இதுகுறித்து மாகறல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நேதாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அண்ணன் பாரதி குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரண் அடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சொத்து விற்பனை செய்ததில் தகராறு தம்பியை சரமாரி அடித்து கொன்ற அண்ணன் கைது: காஞ்சிபுரம் அருகே பயங்கரம் appeared first on Dinakaran.

Read Entire Article