கோவை, பிப். 25: கோவை மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சி தலைவர் அழகு ஜெயபாலன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவை மாநகரில் சொத்து வரி விதிப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ‘டிரோன் சர்வே’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், கோவை மாநகராட்சி மாமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம். அத்துடன்,சொத்து வரி உயர்வையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று, டிரோன் சர்வே திட்டத்தையும், சொத்து வரி உயர்வையும் ரத்து செய்துள்ளீர்கள்.
சொத்து வரி செலுத்த தவறினால் 1 சதவீதம் அபராதம் விதிக்கும் நடைமுறையையும், எங்களது கோரிக்கையை ஏற்று ரத்து செய்துள்ளீர்கள். தங்களுக்கு, கோவை மாநகராட்சி மாமன்ற கவுன்சிலர்கள் குழு சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள சொத்து வரியில் 50 சதவீதம் குறைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கூடுதலாக 6 சதவீதம் சொத்து வரி உயர்வு என்பதையும் ரத்து செய்ய வேண்டும். தொழில் வரி விதிப்பையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post சொத்து வரி உயர்வு, டிரோன் சர்வே ரத்து: தமிழக முதல்வருக்கு காங். நன்றி appeared first on Dinakaran.