இந்தூர்,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி டிசம்பர் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
தொடக்க நாளான இன்று தமிழக அணி தனது தொடக்க ஆட்டத்தில் திரிபுராவுக்கு எதிராக ஆடி வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தமிழகம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சுதர்சன் 9 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஜெகதீசன் களம் இறங்கினார். ஜெகதீசன் - இந்திரஜித் இணை அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. ஜெகதீசன் மற்றும் இந்திரஜித் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஜெகதீசன் 50 ரன்னிலும், இந்திரஜித் 78 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஷாரூக் கான் 31 ரன், விஜய் சங்கர் 38 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் தமிழக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 234 ரன்கள் குவித்தது. தமிழகம் தரப்பில் ரித்திக் ஈஸ்வரன் 17 ரன்னுடனும், சோனு யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திரிபுரா அணி ஆட உள்ளது.