சைகையில் பொருள் உணர்

2 weeks ago 2

‘குறிப்பறிந்து செயல்படு’ என்று அழகான ஒரு வழியைச் சொல்லித் தருகிறார் பாரதியார். இதற்குரிய விளக்கத்தை இன்றைய கணவன் மார்களைக் கேட்டால் சரியாகச் சொல்லிவிடுவார்கள். மனைவியரின் ஒவ்வொரு கண்ணசைவுக்கும் என்ன பொருள் என்பதை ஓர் அகராதி போடும் அளவுக்குத் தெரிந்து வைத்துள்ளனர். மனைவி கண்ணைச் சற்று இடுக்கிக் கொண்டு தலையை அசைத்தால் என்ன பொருள், மாமியார் எதிரில் கண்களை அகல விரித்து முறைத்துப் பார்த்தால் என்ன அர்த்தம் என்பதெல்லாம் இன்றைய கணவர்களுக்குஅத்துப்படி. ஆனால், பழைய இலக்கியமோ ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ (திரிகடுகம்) என்கிறது. நபிகளாருக்கு அப்போது நாற்பது வயது. மக்கா நகருக்குச் சற்று தொலைவில் உள்ள ஹிரா குகையில் ஆழ்ந்த இறைதியானத்தில் மூழ்கியிருந்தபோது, வானவர் ஜிப்ரீல் தோன்றி வேத வசனங்களைக் கூறத் தொடங்கினார்.திடீரென்று ஏற்பட்ட அந்த நிகழ்வினால், நபிகளார் பெரிதும் திடுக்கிட்டு அச்சம் கொண்டார். அவருடைய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வேகமாக வீட்டிற்குத் திரும்பி வந்து தம் மனைவி கதீஜாவிடம் “என்னைப் போர்த்துங்கள்… என்னைப் போர்த்துங்கள்…” என்றார்.

நபிகளாரின் மனைவி கதீஜா குறிப்பறிந்து செயல்படும் கூர்மையான அறிவுள்ளவர். தம் கணவருக்கு ஏதோ அரிய செயல் நடந்திருக்கிறது என்பதை வினாடி நேரத்தில் புரிந்துகொண்டார். உடனடியாக நபிகளாரை ஒரு போர்வையால் போர்த்திவிட்டு ஆறுதல் சொல்லத் தொடங்கினார்.“அன்புக் கணவரே, நீங்கள் எதற்கும் அஞ்சாதீர்கள். நீங்கள் ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் பெரிதும் உதவுகிறீர்கள். இல்லாதவர்களுக்கு வாரி வழங்குகிறீர்கள். அநாதைகளை அன்புடன் நடத்துகிறீர்கள். உறவினர்களைப் பேணி வாழ்கிறீர்கள். ஆகவே, இறைவன் உங்களைக்கைவிடமாட்டான். தைரியமாக இருங்கள்” என்று ஆறுதல் மொழி கூறினார். கதீஜாவின் அந்த அன்பு மொழிகள் நபிகளாரின் துன்ப நிலையைப் பெரிதும் போக்கின.“போர்த்துங்கள்…போர்த்துங்கள்…”என்று நபிகளார் சொன்னவுடன் கதீஜா, ‘என்ன போர்வை, எதற்குப் போர்வை, நல்லாத்தானே தியானம் செய்ய மலைக்குப் போனீங்க, இப்ப என்ன திடீர்னு போர்வை…?” என்றெல்லாம் குறுக்குக் கேள்விகள் கேட்டுக் கொண்டு மசமச என்று நிற்காமல் ‘கொண்டான் குறிப்பறிந்து செயல் படும் பெண்டாட்டி’யாக நடந்து கொண்ட கதீஜா, கணவருக்கு ஆறுதல் அளித்துத் தன்னம்பிக்கையும் ஊட்டினார்.

குடும்பத்தில் மட்டுமல்ல,அரசியலில், ஆட்சியில், அலுவலகத்தில் எனப் பல இடங்களிலும் சில சமயம் சில விஷயங்களை நாம் குறிப்பால் உணர்த்த வேண்டியிருக்கும். மற்றவர்களும் நமக்குச் சில செய்திகளை சைகையால் சொல்ல முயல்வர். அவற்றைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
– சிராஜுல் ஹஸன்.

The post சைகையில் பொருள் உணர் appeared first on Dinakaran.

Read Entire Article