சேலம் ரவுடி வெட்டி கொல்லப்பட்ட விவகாரம்: 9 பேரை கைது செய்த போலீசார்

9 hours ago 2

ஈரோடு

சேலம் கிச்சிபாளையம் சுந்தர்தெருவை சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியா (வயது 35). இவருடைய மனைவி சரண்யா (28). வக்கீல். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரபல ரவுடியாக வலம் வந்த ஜானின் மீது சேலம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சேலத்தில் நடந்த கொலை வழக்கில் ஜான் கைதாகி சிறையில் இருந்து வந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையத்தில் தனது மனைவி சரண்யா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜான், சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தினமும் சென்று கையெழுத்திட்டு வந்தார். அதன்படி நேற்று காலை ஜான் தனது மனைவியுடன் காரில் திருப்பூரில் இருந்து சேலம் அன்னதானப்பட்டிக்கு சென்றார். அங்கு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பிறகு இருவரும் திருப்பூருக்கு புறப்பட்டனர்.

கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் நசியனூர் முள்ளம்பட்டிபிரிவில் கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மற்றொரு கார் பின்தொடர்ந்து வந்தது. அந்த காரில் இருந்த மர்மநபர்கள் ஜான் ஓட்டிச்சென்ற காரின் டயரில் குதிரையின் லாடத்தை வீசினர். இதில் ஜானின் கார் டயர் பஞ்சராகி தாறுமாறாக ஓடியது. அவர் பிரேக் போட்டு காரை சாலையோரமாக நிறுத்தினார்.

அதற்குள் பின்னால் வந்த காரும், ஜானின் கார் மீது பயங்கரமாக மோதியது. அப்போது அந்த காரில் இருந்து மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் திபுதிபுவென இறங்கியது. அவர்கள் வருவதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த ஜானும், சரண்யாவும் காரில் இருந்து வெளியேறி தப்பித்து ஓட முயன்றனர். அதற்குள் அந்த கும்பல் காரை சுற்றி வளைத்தது.

அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஜானை சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, ஜானை காப்பாற்ற முயன்றார். இதில் அவர் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து அவர்கள் வந்த காரிலேயே தப்பித்து சென்றது.

கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சம்பவம் என்பதால், அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது படுகாயம் அடைந்த சரண்யா நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே போலீசார் கொலையாளிகளை பிடிக்க தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே நசியனூர் பச்சபாளிமேடு பகுதியில் அந்த கும்பல் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

பச்சபாளிமேடு பகுதியில் அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் போலீசாரை தாக்க முயன்றனர். இதில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் தற்காப்புக்காக அவர்களை நோக்கி போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் துப்பாக்கியால் காலில் சுட்டனர்.

இதில் காயம் அடைந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும், ஏட்டும் சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்த கொலை வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சில கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் ஈரோட்டில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஏற்கெனவே 4 பேர் பிடிபட்டநிலையில், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 9 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Read Entire Article