சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 31,321 பேரிடம் இருந்து ரூ2.22 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டது. நாடு முழுவதும் இயங்கும் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போர் மற்றும் முறைகேடான பயணம் மேற்கொள்வோருக்கு ரயில்வே நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது. இத்தகைய சோதனையை கோட்டம் வாரியாக அதிகளவு நடத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில், கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா உத்தரவின்பேரில் முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையிலான வணிகப்பிரிவு அலுவலர்கள் தொடர் சோதனையை நடத்தி வருகின்றனர்.
சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் கடந்த மாதம் (பிப்ரவரி) நடத்தப்பட்ட சோதனையில், டிக்கெட் இன்றியும், முன்பதிவில்லா டிக்கெட் வைத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியில் முறைகேடாகவும், அதிகபடியான லக்கேஜ் வைத்துக்கொண்டும் பயணித்த 31,321 பேர் சிக்கினர். அவர்களுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் அபராதம் விதித்து, வசூலித்தனர். இந்தவகையில், டிக்கெட் இன்றி பயணித்த 15,414 பயணிகளிடம் இருந்து ₹1,37,23,934ம், முன்பதிவில்லா டிக்கெட் வைத்துக்கொண்டு முன்பதிவு பெட்டி மற்றும் ஏசி பெட்டிகளில் பயணித்த 15,810 பயணிகளிடம் இருந்து ₹84,44,482ம், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக லக்கேஜ் எடுத்து சென்ற 97 பயணிகளிடம் இருந்து ₹43,487ம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 31,321 பேரிடம் இருந்து ₹2,22,11,903 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், `ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போர் மற்றும் வகுப்பு மாறி பயணிப்போர் மீது ரயில்வே சட்டப்படி அபராதத்துடன் டிக்கெட் தொகை வசூலிக்கப்படுகிறது. இத்தகைய சோதனையை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறோம். அதனால், ரயிலில் பயணிக்கும் மக்கள், முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க கேட்டுக்கொள்கிறோம். மீறி டிக்கெட் இன்றி பயணித்தால், டிக்கெட் பரிசோதகர்களால் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்படும்,’’ என்றனர்.
The post சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்த 31,321 பேருக்கு ரூ.2.22 கோடி அபராதம் appeared first on Dinakaran.