*அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்
சேலம் : சேலம் மாவட்டத்தில் 70 கோயில்களில் க்யூஆர் கோடு மூலம் உண்டியல்கள் காணிக்கை, நன்கொடை செலுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சேலம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் 24 ஆயிரத்து 608 சிவன் கோயில்களும், 10 ஆயிரத்து 33 பெருமாள் கோயில்களும் உள்ளன. சிறிய, பெரிய கோயில்கள் 10 ஆயிரத்து 346 உள்ளது.
மொத்தம் 38 ஆயிரத்து 615 கோயில்கள் உள்ளன. ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்கள் முதல்நிலை கோயிலாகவும், ரூ.5 லட்சம் வருமானம் வரும் கோயில்கள் 2ம் நிலை கோயிலாகவும்,ரூ.3 லட்சம் உள்ள கோயில்கள் மூன்றாம் நிலை கோயிலாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தும் வசதிகள் பல ஆண்டாக வழக்கத்தில் இருந்து வருகிறது. உண்டியல்களில் சேரும் காணிக்கை பக்தர்களால் எண்ணப்பட்டு கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.
காணிக்கையை எண்ணும்போது அந்த மாவட்டத்தை சேர்ந்த அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதை முழுக்க வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று விதிமுறைகளில் உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்றபின்பு அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதிலும் நவீன முறையை அரசு கொண்டு வந்துள்ளது. பக்தர்கள் ஸ்மார்ட் செல்போன் மூலம் க்யூஆர் கோடு வழியாக உண்டியல் காணிக்கை, அன்னதானத்திட்டத்திற்கு நன்கொடை, கும்பாபிஷேக திருப்பணிக்கு நன்கொடை, கோயிலுக்கு நன்கொடை உள்ளிட்டவைகள் செலுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சேலம் அதிகாரிகள் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயில்களிலும் அதன் வருமானத்தை கொண்டு உண்டியல்கள் நிறுவப்படுகிறது. பெரிய கோயில்களில் 20க்கும் மேற்பட்ட உண்டியல்களும், நடுநிலையான கோயில்களில் பத்து உண்டியல்களும், சிறிய கோயில்களில் 5 உண்டியல்கள் வைக்கப்படுகிறது.
இந்த உண்டியல்களில் சேரும் காணிக்கை மூன்று மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டு கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.அன்னதானத்திட்டத்திற்கு நன்கொடை, கோயில் திருப்பணிக்கான நன்கொடை உள்ளிட்டவைகள் பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் பணமாக செலுத்தி ரசீது வழங்கப்படுகிறது.
தற்போது உண்டியல் காணிக்கை, அன்னதான திட்டம், கோயில் திருப்பணி உள்ளிட்ட நன்கொடைகள் க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் க்யூ ஆர் கோடு மூலம் உண்டியல் காணிக்கை, நன்கொடை செலுத்தும் திட்டம் முதல்கட்டமாக பெரிய கோயில்கள் தொடங்கப்பட்டது. தற்போது இரண்டாம் நிலை கோயில்களிலும் க்யூஆர் கோடு மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சுகவனேஸ்வரர், கோட்டை பெருமாள், கோட்டை மாரியம்மன், பேளூர் தான்தோன்றீஸ்வரர், தாரமங்கலம் கைலாசநாதர், செவ்வாய்பேட்டை மாரியம்மன், காருவள்ளி சின்னதிருப்பதி பெருமாள், வடசென்னிமலை, ஆறகளூர் காமநாதீஸ்வரர் என 70 கோயில்களில் க்யூஆர் கோடு மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் படிப்படியாக 300க்கும் மேற்பட்ட கோயில்களில் இத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post சேலம் மாவட்டத்தில் 70 கோயில்களில் க்யூஆர் கோடு மூலம் காணிக்கை, நன்கொடை செலுத்தலாம் appeared first on Dinakaran.