PCODயினால் உடல் பருமனா?

3 hours ago 2

நன்றி குங்குமம் தோழி

குழந்தையின்மை, இன்றைய பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. திருமணமான ஐந்து பெண்களில் ஒருவர் இந்தப் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். இந்த சதவிகிதம் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் என்கிறார் பெரியாட்ரிக் நிபுணரான டாக்டர் பிரவீன். இவர் குழந்தையின்மைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விவரித்தார்.‘‘கர்ப்பம் தரிப்பதில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைக்கு பல காரணங்களை குறிப்பிடலாம். அதில் முக்கியமானது PCOD.

இது பெண்கள் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்னை. PCOD இருக்கும் பெண்கள் மாதவிடாய் பிரச்னைகளை சந்திப்பார்கள். இரண்டாவது ஹார்மோனில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் முகத்தில் முடி வளரும், கழுத்தில் கருப்பு நிறத்தில் பிக்மென்டேஷன், கருப்பையில் சின்னச் சின்ன நீர் கட்டிகள் இவை எல்லாம் PCODயின் அறிகுறிகள். இந்த நீர் கட்டிகளைதான் பாலிசிஸ்ட் என்று மருத்துவத்தில் குறிப்பிடுவார்கள். கருப்பையில் நீர் கட்டிகள் உள்ள பெண்களில் 60 சதவிகிதத்தினர் உடல் பருமனாக இருப்பார்கள். PCOD, உடல் பருமன் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இவை ஏற்பட காரணம் உடலில் ஏற்படும் கொழுப்பு மற்றும் அதில் உள்ள வீக்கம். அதனை இன்பிளமேஷன் என்று குறிப்பிடுவோம். இந்த இன்பிளமேஷன்தான் ஹார்மோன் மாற்றம், மாதவிடாய் பிரச்னைக்கான மூலக்காரணம்.

இன்பிளமேஷன் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இன்சுலின் சரியாக சுரக்காது. அதே போல் PCOD உள்ளவர்களும் இன்சுலின் எதிர்ப்பினை சந்திப்பார்கள். அதனால் மகப்பேறு நிபுணர்கள் PCOD ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு நீரிழிவிற்கான மாத்திரையை பரிந்துரைப்பார்கள். அது PCOD மட்டுமில்லாமல் நீரிழிவு பிரச்னை ஏற்படாமலும் பாதுகாக்கும். PCOD பிரச்னைக்கான ஒரே தீர்வு உடம்பில் உள்ள கொழுப்பு தன்மையை குறைப்பது’’ என்றார்.

‘‘பொதுவாக உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாலே அவர்களின் எடை கணிசமாக குறையும். ஆனால் ெகாழுப்பில் வீக்கம் உள்ளவர்களால் எளிதில் குறைப்பது கடினம். மேலும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பம் தரிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலை மாறினால்தான் இதற்கான தீர்வு கிடைக்கும். இன்று கல்லூரியில் படிக்கும் பெண்கள் பலர் மாதவிடாய் பிரச்னையை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு ஆய்வு செய்து பார்த்தால் PCOD பிரச்னை இருக்கும். அதற்கு ஒரே தீர்வு எடையை குறைப்பது. உடல் எடையினை பெரியாட்ரிக் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடியும். இதனால் அவர்களின் அடிப்படை பிரச்னை நீங்கி எளிதில் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளது.

இந்த சிகிச்சை உடல் எடை மட்டுமில்லாமல் கொழுப்பில் உள்ள வீக்கத்தினையும் குறைக்க உதவும். உடல் பருமன் குறித்த நம்மில் பலருக்கு சரியான புரிதல் இல்லை. முறையான ஆலோசனையின்றி டயட் இருக்கிறார்கள். எடை குறையும் அதே சமயம் அவர்களின் தசையின் அளவும் சுருங்கும். அதன் பிறகு அவர்கள் உடல் அதிகரித்தால் தசை மீண்டும் வளர்ச்சியடையாது, மாறாக உடலில் கொழுப்பு சேர்வது அதிகமாகும். விளைவு உடல் அமைப்பில் தொய்வு தென்படும்’’ என்றவர் சிகிச்சை முறை பற்றி விளக்கம் அளித்தார்.

‘‘ஒருவர் தன் உடல் எடையை குறைக்கும் முன் அவர்களின் பாடி காம்போசிஷனை கணக்கிட வேண்டும். அதாவது, கொழுப்பு மற்றும் தசைகளின் அளவு. அதன் பிறகு தசையின் அளவில் பாதிப்பு ஏற்படாமல் உடல் பருமனை குறைய வைப்பதுதான் சரியான சிகிச்சை முறை. இந்த சிகிச்சை மூலம் கொழுப்பை மட்டுமே குறைக்கிறோம். தசையின் அளவில் எந்த மாறுபாடும் ஏற்படாது. தசை உடலில் எரிப்பு தன்மைக்கு மிகவும் முக்கியம். கொழுப்பு குறையும் போது அதில் உள்ள வீக்கமும் குறையும், ஹார்மோன் பிரச்னை நீங்கி மாதவிடாய் சீராகினால் இயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த சிகிச்சையினை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அனைவருக்கும் அளிப்பதில்லை. 95 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறோம்.

நாம் சாப்பிடும் உணவு குடலுக்குள் செல்லும் போது, அங்கு சுரக்கும் ஹார்மோன்கள் உணவினை எரிக்கும். அதில் எவ்வளவு கொழுப்பு உடலில் சேரவேண்டும், கழிவாக வெளியேற்றப்பட வேண்டும் என்று முடிவாகும். இந்தஎரிப்பு தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை மூலம் குடலில் ஒரு பைபாஸ் சர்ஜரி செய்வோம். விளைவு ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். உணவு சாப்பிடும் அளவும் குறையும். இவை இரண்டும் ஒன்றாக செயல்படும் போது, உடலில் எரிப்பு தன்மையும் அதிகரிக்கும். படிப்படியாக கொழுப்பின் தன்மையும் குறையும். ஆறு ஏழு மாதத்தில் உடலில் கொழுப்பு படிப்படியாக குறையும். அதிக எடையுள்ளவர்களால் குறைக்க முடியாத காரணத்தால் இந்த சிகிச்சை மூலம் உடலின் மெட்டபாலிசத்தை மாற்றி உடல் எடையை குறைய செய்கிறோம்.

சிகிச்சைக்குப் பிறகு தசைகளின் அளவு குறையாமல் இருக்க உணவு ஆலோசகரின் அறிவுரைப்படி புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையினை பின்பற்ற உதவும். சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் உணவு மற்றும் உடல் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். பெண்கள் சிகிச்சை எடுத்த ஒரு வருடம் கழித்து கருத்தரிக்கும் முயற்சியினை மேற்கொள்ளலாம். சிகச்சை எடுத்துவிட்டோம் என்று இல்லாமல், ஆரோக்கிய உணவுப் பழக்கம், முறையான உடற்பயிற்சி, நேரத்திற்கு தூக்கத்தினை பின்பற்றினால் குழந்தையின்மை மட்டுமில்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு வழிகாட்டியாக அமையும்’’ என்றார் டாக்டர் பிரவீன்.

தொகுப்பு: நிஷா

The post PCODயினால் உடல் பருமனா? appeared first on Dinakaran.

Read Entire Article