
சேலம் கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் பெருமாள் கோவில் உள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த பல மாதங்களாக கோவில் புனரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த திருப்பணிகள் முடிவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாக சாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்கள் எடுத்து செல்லப்பட்டன.
பின்னர் காலை 10 மணி அளவில் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. கோவிலை சுற்றியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என முழக்கமிட்டனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி அழகிரிநாதர், விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.