*தர்மபுரியில் ஏற்கனவே சிக்கி சஸ்பெண்டானவர்
சேலம் : சேலம் அருகே மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேலம் அருகே செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக, ஏற்காடு அடிவாரத்ைத சேர்ந்த சுப்பிரமணியன் (59) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப்பள்ளிக்கு மாறுதலாகி வந்த அவர், மாணவிகளிடம் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி அழுதனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்ததுடன், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட சைல்டு லைன் அமைப்பிற்கும் புகார் மனு அனுப்பினர்.
இதன்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மான்விழி மற்றும் மாவட்ட சைல்டு லைன் நிர்வாகிகள், தனித்தனியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளி மாணவிகள் மற்றும் சக ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவிகளிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில், கல்வித்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் கலைவாணி, மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது கைது செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மீது, ஏற்கனவே பல்வேறு பாலியல் புகார்கள் இருந்துள்ளது. குறிப்பாக, அவர் சேலம் அடுத்த சுக்கம்பட்டியில் முதுகலை ஆசிரியராக இருந்தபோது சில்மிஷத்தில் ஈடுபட்டு பிரச்னையானது. பின்னர், தர்மபுரியில் பணிபுரிந்த போது, மாணவிகளிடம் அத்துமீறியதற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
மீண்டும் பணியில் சேர்ந்த அவர் மேட்டூர் அருகில் உள்ள பள்ளியிலும், அதனை தொடர்ந்து தற்போதுள்ள பள்ளிக்கும் மாறுதலாக வந்துள்ளார். இங்கு சேர்ந்த 5 மாதத்திலேயே மீண்டும் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விரிவான அறிக்கை, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.
The post சேலம் அருகே பரபரப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது appeared first on Dinakaran.