சேலம்: சேலம் அருகே போலீஸ் ஸ்டேசனில் எஸ்.ஐ.,யும், ஏட்டும் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றி வரும் எஸ்.ஐ. ஒருவரிடம், ஏட்டு ஒருவர் இன்ஸ்பெக்டர் கூறியதாக சொல்லி ₹5 ஆயிரத்தை வாங்கிச் சென்றார். பின்னர் ₹4 ஆயிரத்தை ஏட்டு திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள ₹1000 எங்கே என எஸ்.ஐ. கேட்டுள்ளார். இதற்கு ஏட்டு, கோர்ட்டுக்கு சென்று வருவதால் செலவாகி விட்டதாக கூறினார். அப்போது இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
இதில் கோபம் அடைந்த எஸ்.ஐ., ஏட்டுவின் செல்போனை பையில் இருந்து சட்டென எடுத்துள்ளார். உங்கள் செல்போனை எடுப்பதற்கு சிறிது நேரம் கூட ஆகாது என ஏட்டு தெரிவிக்க, கடுமையான வார்த்தையால் எஸ்.ஐ.,பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு ஏட்டுவின் பதில், எஸ்.ஐ.யை ஆத்திரமடைய செய்யவே ஏட்டுவை தாக்கியுள்ளார். பதிலுக்கு ஏட்டும் எஸ்.ஐ.யை பளாரென அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் பிடித்து பிரித்துச் சென்றனர். இதனால் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேசனில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஸ்டேசனுக்கு சென்று விசாரணை நடத்தியதுடன், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்டமாக எஸ்.ஐ.,யை கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேசனுக்கும், ஏட்டுவை இரும்பாலை ஸ்டேசனுக்கும் மாற்றினர். விரைவில் இவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post சேலம் அருகே பண விவகாரத்தில் தகராறு; போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஏட்டு அடிதடி: ஒருவருக்கொருவர் பளார் விட்டனர் appeared first on Dinakaran.