சேலம் அருகே பட்டாசு வெடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு

6 hours ago 3

சென்னை: சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பூசாரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று (25.4.2025) இரவு சுமார் 8.50 மணியளவில் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லும்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் கஞ்சநாயக்கன்பட்டி, கொட்டமேடுவைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 29), குருவாலியூரைச் சேர்ந்த சிறுவர்கள் செல்வன். தமிழ்செல்வன் (வயது 11) த/பெ.சேட்டு மற்றும் செல்வன். கார்த்தி (வயது 11) த/பெ.சுப்பிரமணி ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொட்டமேடுவைச் சேர்ந்த லோகேஷ் (வயது 20) த/பெ.தங்கராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

The post சேலம் அருகே பட்டாசு வெடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article