
சேலம்,
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர் சென்னன் (65). இவரது மகள் சுதா (38). இவரை சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாள குண்டத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். சுதா-வெங்கடாசலம் ஆகியோருக்கு விஷ்ணு (12) என்ற மகன் இருந்தார். இவர் வெள்ளாள குண்டம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது விஷ்ணுவுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் சுதா தனது மகன் விஷ்ணுவை அழைத்துக்கொண்டு திப்பம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் சென்னன் தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோருடன் சமயபுரம் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை சென்னன் கோவிலுக்கு செல்வதற்காக தனது மகள் சுதா, பேரன் விஷ்ணு ஆகியோரை இருசக்கரம் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றார். தனது மோட்டார் சைக்கிளை மல்லூரில் உள்ள ஒரு ஸ்டேண்டில் நிறுத்திவிட்டு பஸ்சில் செல்ல திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சென்னன் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பிரிவு ரோட்டில் சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி பருப்பு ஏற்றி வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்தானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சென்னன், அவரது மகள் சுதா. பேரன் விஷ்ணு ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். இதுபற்றி தெரியவந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் (57) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.