சேலம்:தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சேலத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் திடீரென கருமேகம் சூழ்ந்தது. அடுத்த 15 நிமிடத்தில், இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.
இதனால், மாநகரில் கிச்சிப்பாளையம், நாராயணநகர், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளிலும் வெள்ளமென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆத்தூர், மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீர் கனமழை பெய்தது. 3 மணி நேரம் வரை பெய்த மழைக்கு மேட்டூர் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. அஸ்தம்பட்டி, அய்யந்திருமாளிகை, அடிவாரம், கொல்லப்பட்டி, கன்னங்குறிச்சி பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் பயங்கரமாக தொடர்ந்து இடியுடன் மழை பெய்தது. அதிக சத்தத்துடன் இடி விழுந்தபடியே இருந்ததால், வீடுகளில் மக்கள் தூங்க முடியாமல் அவதியடைந்தனர். எங்கு வீட்டின் மீது இடி விழுமோ என்ற அச்சத்தில் தூங்காமல் கண்விழித்திருந்தனர்.
ஆத்துார், முல்லைவாடி, நரசிங்கபுரம், கொத்தாம்பாடி, பைத்துார், மஞ்சினி, அம்மம்பாளையம் பகுதிகளில் மழைக்கு சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளில் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவில் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சாக்கடை கால்வாய் நிரம்பி, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. மருத்துவமனை காலனி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. ஒர்க் ஷாப் கார்னரில் பெரிய மரம் ஒன்று சாலையின் நடுவே சாய்ந்தது. இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தகவறிந்து வந்த போலீசார் வாகன போக்குவரத்தை கிழக்கு நெடுஞ்சாலையில் திருப்பி விட்டுள்ளனர். மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post சேலத்தில் இடியுடன் கொட்டி தீர்த்த கனமழை appeared first on Dinakaran.