சேலத்தில் ₹7 கோடியில் விளையாட்டு விடுதி; நகர்ப்புறங்களுக்கும் விளையாட்டு உபகரணம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

4 weeks ago 4

சேலம்: ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்’ என, சேலத்தில் நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சேலம், நாமக்கல் மாவட்ட கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று சேலம் நேரு கலையரங்கில் நடந்தது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 707 கிராம ஊராட்சிகளுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் 3,583 பேருக்கு ₹33.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
இந்த விழாவில் பாராலிம்பிக் வீரர்கள் மாரியப்பன், துளசிமதி இருவரும் விஐபிக்களாக பங்கேற்றுள்ளனர். விழாவில் பேசிய துளசிமதி, மாரியப்பன் தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக கூறினார். எனக்கு இன்ஸ்பிரேஷனாக துளசிமதி உள்ளார். ஏனெனில் நான் கல்லூரி காலங்களில் பேட்மிண்டன் விளையாடினேன். அதன்பின்னர் நேரம் கிடைக்கவில்லை.

தற்போது துளசிமதியின் சாதனைகள், பதக்கங்களை பார்க்கும் போது, வாரம் ஒருமுறை ஒரு மணி நேரமாவது பேட்மிண்டன் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். இவர்களைப்போல பலநூறு பேரை உருவாக்க முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்காக ₹83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 36 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.

கிராமப்புறங்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவது போல, நகர்ப்புறங்களுக்கும் அத்திட்டம் விரிவுபடுத்தப்படும். சேலம் கருப்பூரில் பன்னோக்கு விளையாட்டு மையம் ₹20 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் என்ற அடிப்படையில் மேட்டூர், ஆத்தூர், சேந்தமங்கலம் தொகுதிகளில் தலா ₹3 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் கட்டப்பட உள்ளது.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானம் ₹3.63 கோடியில் மேம்படுத்தப்படும். இன்று காலை செல்போனில் என்னை தொடர்பு கொண்ட முதல்வர், முக்கிய அறிவிப்பை வெளியிட அறிவுறுத்தினார். அதன்படி, விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை அடிப்படையில், சேலத்தில் 60 பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில், ₹7 கோடியில் விரைவில் விளையாட்டு விடுதி அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஊக்கத்தொகை கொடுத்து முதல்வர் பாராட்டினார்: மாரியப்பன், துளசிமதி நெகிழ்ச்சி
விழாவில் பாராலிம்பிக் வீரர்கள் மாரியப்பன், துளசிமதி ஆகியோருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். மாரியப்பன் பேசுகையில், ‘‘முன்பெல்லாம் இது போன்ற வசதிகள் கிடையாது. தற்போது அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது. 2006ல் நான் பதக்கம் பெற்றபோது, எனக்கு சப்போர்ட் இல்லை. இப்போது துணை முதல்வர் உதயநிதி மூலம் நிறைய சப்போர்ட் கிடைத்திருக்கிறது. வெற்றி பெற்று திரும்பியதும் பாராட்டி உடனே ஊக்கத்தொகை கொடுத்தார். இதனால் பிற மாநிலத்தவர்கள், நம்மீது பொறாமை கொள்ளும் நிலை உள்ளது,’’ என்றார்.

பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசுகையில், ‘‘கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 15 நாடுகளுக்கு சென்று வந்து விட்டேன். 16 தங்கப்பதக்கம் 11 வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்கள் பெற்றிருக்கிறேன். அப்பா தான் எனது பயிற்சியாளர். தனியார் கிளப்பிற்கு சென்று நான் பயிற்சி பெறவில்லை. அரசு ஸ்டேடியத்தில்தான் பயிற்சி எடுத்தேன். அரசு சலுகைகளை பயன்படுத்தி இந்த அளவிற்கு வந்திருக்கிறேன். இதை பெருமையாக கருதுகிறேன். வெற்றி பெற்று திரும்பியதும் முதலமைச்சர் ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டினார். இது பயனுள்ளதாக இருந்தது,’’ என்றார்.

‘2026 தேர்தல்தான் பைனல் கேம்’
திமுக இளைஞர் அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சேலம் கருப்பூரில் உள்ள தீர்த்தமலை பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் இளைஞரணி மாநில செயலாளரும்,துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
2026 சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். 2024 நாடாளுமன்ற தேர்தல் செமி பைனல். அதில் நீங்கள் அனைவரும் உங்களை நிரூபித்து விட்டீர்கள், சிறப்பாக செயல்பட்டீர்கள். 2026 சட்டமன்ற தேர்தல் பைனல் கேம். அதில் நாம் ஜெயிக்க வேண்டும். இந்த தேர்தல் களத்தில், 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற, தலைவர் இலக்கு நிர்ணயித்துள்ளார். 200 என்பது டார்கெட். இளைஞர் அணியினர் 200ஐ தாண்டி திமுகவை ஜெயிக்க வைக்க வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணியை இப்பொழுதே தொடங்கி விட்டோம். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு என்னென்ன வேண்டுமோ, அதை மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக செய்து கொடுக்க வேண்டும். உங்களுக்கு பின்னால் நம் முதல்வர் இருக்கிறார், நான் இருக்கிறேன். 2026ம் ஆண்டு நம் ஆண்டாக இருக்க வேண்டும். கழகத் தலைவர் தலைமையில், இரண்டாவது முறையாக கழகம் ஆட்சி அமைத்தது என்கிற வரலாற்றை, இளைஞர் அணியினர் உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் இப்போதிருந்தே உழைக்க தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post சேலத்தில் ₹7 கோடியில் விளையாட்டு விடுதி; நகர்ப்புறங்களுக்கும் விளையாட்டு உபகரணம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article