வீரவநல்லூர்,ஏப்.2: சேரன்மகாதேவியில் குற்றசம்பவங்களை குறைக்கும் வகையில் மாணவர்கள், இளைஞர்களிடையே விளையாட்டினை ஊக்குவிக்கும் விதமான தனி முயற்சி மேற்கொண்டு மைதானம் அமைத்து கொடுத்த இன்ஸ்பெக்டருக்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக திகழ்ந்தது. காவல்நிலைய பதிவேட்டின்படி இளம்சிறார்கள் அதிகளவில் குற்றங்களில் ஈடுபட்ட பகுதியாக இருந்தது. இதனை கட்டுப்படுத்தி 18 வயதிற்குட்பட்ட மாணவர்களை நல்வழிப்படுத்த காவல்துறை புதுமுயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்காக கடந்தாண்டு ஆகஸ்ட்டில் சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற தர்மராஜ், பேரூராட்சியின் காந்தி பார்க் கிழக்கே குற்றங்கள் அதிகம் நடைபெற்றதை கண்டறிந்து அப்பகுதி மாணவர்கள், இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம், போட்டிகள் நடத்தி அவர்களை சீரான பாதையில் அழைத்துச் செல்ல சிறப்பு முயற்சி மேற்கொண்டார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு விளையாட்டு போட்டியும் நடைபெறாத தேரடித்தெரு பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தி பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி ஒற்றுமையை ஏற்படுத்தினார். புத்தாண்டு நள்ளிரவு அதே பகுதியில் பொதுமக்களை ஒன்றிணைத்து கேக்குகள் வெட்டி ஒற்றுமையை நிலைநாட்ட வழிவகுத்தார். ஒவ்வொரு தெருக்களிலும் தனித்தனியாக கூட்டம் போட்டு பெற்றோர்களுக்கு ஆண் குழந்தைகளை வளர்க்கும் முறை குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்நிலையில் தேரடி தெரு பகுதியில் மாணவர்கள் விளையாடுவதற்காக பேரூராட்சி நிர்வாகம் மூலம் விளையாட்டு மைதானம் புதிதாக அமைத்து கொடுத்தார். இறகு பந்து விளையாடுவதற்கு பேட் மற்றும் இறகு பந்து வாங்கி கொடுத்துள்ளார். இதன் மூலம் சேரன்மகாதேவி பகுதியில் குற்றச்சம்பவங்கள் குறைந்து விளையாட்டில் மாணவர்கள், இளைஞர்கள் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் தர்மராஜின் இந்த புதிய முயற்சி சேரன்மகாதேவி பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
The post சேரன்மகாதேவியில் குற்றசம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறை முயற்சி இன்ஸ்பெக்டருக்கு பெற்றோர், சமூக ஆர்வலர்கள் பாராட்டு appeared first on Dinakaran.