சேரன்மகாதேவி அருகே புதுமையான முயற்சிகளுடன் மண்பானை உற்பத்தியில் கூனியூர் மண்பாண்ட கலைஞர்கள் மும்முரம்: இந்த ஆண்டு அறிமுகம் `உருளி’ பானை

14 hours ago 4

நெல்லை: கோடையை முன்னிட்டு மண்பானை உற்பத்தியில் சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் மண்பாண்டக் கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பரியம் காக்கும் புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேரன்மகாதேவிக்கு அருகிலுள்ள கூனியூர் கிராமத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மண்பாண்டத்தொழிலாளர்களின் கைகளில் சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதான மாரிச்சாமி, கடந்த 34 வருடங்களாக மண்பாண்டத் தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தனது பாரம்பரியத் தொழிலை முன்னெடுத்துச் செல்லும் இவர், வெறும் உள்ளூர் சந்தைக்காக மட்டுமல்லாமல், கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் ஆர்டரின் பேரில் மண்பானைகளைத் தயாரித்து அனுப்பி வருகிறார்.

இதுகுறித்து மாரிச்சாமி பேசுகையில், “எனது தந்தை காலத்திலிருந்து நாங்கள் மண்பாண்டத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இது எங்கள் குடும்பத்தொழில். நான் சிறுவயதில் இருந்தே இதைக்கற்றுக்கொண்டேன். இன்று நான் செய்யும் இந்தத் தொழிலை நம்பி சுமார் 40 குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். என்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. குறிப்பாக மாசி மற்றும் பங்குனி மாதங்களில் மண்பானைகளின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும்’’ என்றார். மக்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்பவும், அவர்களைக் கவரும் வகையிலும் புதிய வடிவமைப்புகளை உருவாக்குவதில் மாரிச்சாமி ஆர்வம் காட்டுகிறார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுமையான டிசைன்களை அறிமுகப்படுத்துகிறோம். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் மண்ணால் செய்யப்பட்ட வாட்டர் பாட்டிலை சந்தையில் அறிமுகப்படுத்தினோம்.

அது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைப் போலவே, இந்த ஆண்டு `உருளி’ என்ற புதிய வடிவமைப்பிலான பானைகளை உருவாக்கியுள்ளோம். இவை 8 லிட்டர் மற்றும் 15 லிட்டர் கொள்ளளவில் கிடைக்கின்றன. இந்த உருளி பானைகளின் வடிவமைப்பு அனைவரையும் கவரும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இதனை அன்பளிப்பாக வழங்குவதற்கும் பலர் விரும்புவார்கள்’’ என்றார். மாரிச்சாமியின் இந்த மண்பாண்டத் தொழில், இப்பகுதி மக்களுக்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாக விளங்குகிறது. கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையைத் தணிக்க மண்பானைகளில் உள்ள இயற்கையான குளிர்ச்சி பெரும்பங்கு வகிப்பதால், இவற்றுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. நவீன காலத்து வீட்டு உபயோகப் பொருட்கள் பல வந்தாலும், மண்பானைகளின் தனித்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் காரணமாக மக்கள் இன்றும் அவற்றை விரும்பி வாங்குவது குறிப்பிடத்தக்கது.

பாரம்பரியக் கைத்தொழில்கள் காலப்போக்கில் நலிவடைந்து வரும் நிலையில், மாரிச்சாமி போன்ற கலைஞர்கள் தங்களது விடாமுயற்சியாலும், புதுமையான சிந்தனைகளாலும் இந்தத் தொழிலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்து உள்ளனர். இவர்களது உழைப்புக்கும், கலைத்திறனுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்தால், மேலும் பலரும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதே மண்பாண்டக் கலைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post சேரன்மகாதேவி அருகே புதுமையான முயற்சிகளுடன் மண்பானை உற்பத்தியில் கூனியூர் மண்பாண்ட கலைஞர்கள் மும்முரம்: இந்த ஆண்டு அறிமுகம் `உருளி’ பானை appeared first on Dinakaran.

Read Entire Article