சேமிப்பு கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பப்படும் ரேஷன் பொருட்கள் எடை அளவு குறைவு: விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு

2 days ago 3

மதுராந்தகம், ஏப்.17: சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடை அளவு குறைவாக உள்ளதாக விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டங்களில் 422 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு செய்யூர் மற்றும் சிலாவட்டம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்குகளில் இருந்து அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் எடையளவு குறைவாக இருப்பதாக ரேஷன் கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்வதில் தங்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் பொருட்களின் எடை அளவு குறைவாக உள்ளதாக கூறி அபராதம் விதிக்கின்றனர்.

பொருட்களின் எடை அளவை குறைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி விட்டு, கடைகளில் இருக்க வேண்டிய இருப்பு அளவு குறைவாக இருப்பதாக கூறி அபராதம் விதிப்பது சட்டவிரோதம் எனவும், மேலும் ரேஷன் கடைகளில் ஆய்வுக்கு வரும் இன்ஜினியர் ஒருவர் ரேஷன் கடை பணியாளர்களை ஒருமையில் பேசி அவதூறு செய்வதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சங்கர் கூறுகையில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் எந்த ஒரு மூட்டையும் சரியான அளவில் இருப்பதில்லை. இந்நிலையில் ஆய்வு என்ற பெயரில் இன்ஜினியர் ஒருவரும் அதிகாரிகள் சிலரும் ரேஷன் கடை பணியாளர்களை அவதூறாக பேசுவதும் அபராதம் விதிப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே அரசு உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் சரியான அளவை உறுதிப்படுத்தவும், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என கூறினர்.

The post சேமிப்பு கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பப்படும் ரேஷன் பொருட்கள் எடை அளவு குறைவு: விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article