
முல்லான்பூர்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. அதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "கடைசி 4 போட்டிகளில் சென்னை அணியின் பீல்டிங் உச்சத்தில் இல்லை. கேட்ச்களை கோட்டைவிட்ட பின், அதே பேட்ஸ்மேன்க் கூடுதலாக 30 ரன்களை விளாசுகிறார்கள். அதேபோல் சில நேரங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பிரியன்ஷ் ஆர்யா சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரின் ரிஸ்க் மிகப்பெரிய பலனை அந்த அணிக்கு கொடுத்தது.
நாங்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், பஞ்சாப் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். ஒருவேளை 15 ரன்களை குறைத்திருந்தால், சென்னை அணிக்கு சாதகமாக இருந்திருக்கும். ஆனாலும் தோல்விக்கு கேட்ச் டிராப் செய்தது முக்கிய காரணமாக உள்ளது. அதேபோல் 2 சிறந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக தொடங்கினார்கள்.
இருவருமே வேகப்பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டார்கள். அதேபோல் 2 முதல் 3 சிக்ஸ் கிடைத்திருந்தால், ஆட்டத்தில் எங்களின் கைகள் ஓங்கியிருக்கும். பவர் பிளேவில் சிறப்பாக ஆடி இருந்தோம். அதேபோல் கான்வே எப்போதும் டைமிங்கை வைத்து ஷாட்டை உருவாக்கும் பேட்ஸ்மேன். அதனால் ஜடேஜா அந்த நேரத்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது
அதேபோல் அவரின் ரோலும் வித்தியாசமானது. கான்வே சிக்ஸ் அடிப்பதற்காக காத்திருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் கான்வே ரிட்டையர்ட் அவுட் ஆவது அத்தியாவசியமாகிவிட்டது. பீல்டிங்கின் போது கொஞ்சம் உற்சாகமாக இருக்க வேண்டும். பதற்றமாக இருந்தால் கேட்ச்களை கோட்டைவிடுவோம்.
சில நேரங்களில் 2 முதல் 3 ரன்களை தடுத்து, ஒரு ரன் அவுட் செய்தால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் மோசமான நாள் அமையும்.. ஆனால் பீல்டிங்கிற்கு அப்படி இருக்க கூடாது" என்று அவர் கூறினார்.