செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி

2 months ago 6

திருவள்ளூர்: சென்னை – அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்த ரயில் நிலையமாக உள்ளது செவ்வாப்பேட்டை ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இந்த தண்டவாளம் வழியாக நாள்தோறும் 250க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில், நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடப்படும் சமயத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த 2011ம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கினர். அதன்படி மேம்பாலம் கட்டும் பணி அதே ஆண்டு துவக்கப்பட்டதால் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாக பைக், ஆட்டோ போன்ற வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும்போது மிகுந்த அவதிப்பட்டு செல்கின்றனர்.

மேலும் அந்த தண்ணீரை கடக்கும்போது பாம்பு போன்ற விஷப் பூச்சிகள் தாக்கும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் குண்டும் குழியுமான சாலையில் பைக்கில் செல்லும்போது தவறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
இதேபோல் ரயிலில் இருந்து நடந்து செல்பவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரயில் மோதி உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article