சென்னை: பாஜ-அதிமுக கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாஜ- அதிமுக கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம். இந்த கூட்டணிக்காக எடப்பாடியின் நிர்ப்பந்தத்தின் பேரில் அண்ணாமலை பழிவாங்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது, கூட்டணியின் பெயர் தேசிய ஜனநாயக கூட்டணியா, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியா என்று என்ன பெயர் கொண்டு அழைப்பது என்பதிலேயே பிரச்னைகள் உருவாக ஆரம்பித்து விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது.
2014ல் நடந்த ஒரு தேர்தலை தவிர, அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளன. இதற்கு என்ன காரணம் என்றால், தமிழக உரிமைகளை பாதுகாக்கிற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துகிற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு மக்கள் பேராதரவை வழங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்த தலைமை மீது தமிழக மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகும். அதேநேரத்தில், அரசியல் சுயநலத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை, ஒன்றிய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அ.தி.மு.க., இன்றைக்கு பா.ஜ..விடம் சரணடைந்து அமைந்திருக்கிற சந்தர்ப்பவாத கூட்டணியை 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் படுதோல்வியடையச் செய்து உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post செல்வப்பெருந்தகை தாக்கு முரண்பாடுகளின் மொத்த வடிவம் பாஜ – அதிமுக கூட்டணி appeared first on Dinakaran.