செல்போன் பார்க்க கூடாது என கூறியதால் 13 வயது சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை

18 hours ago 1

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொல்லரஹட்டியில் வசித்து வரும் தம்பதிக்கு 13 வயதில் துருவா என்ற மகன் இருந்தான். இந்த சிறுவன் அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். துருவா அடிக்கடி செல்போன் பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் செல்போன் பார்க்க கூடாது, படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோர் அறிவுரை கூறி வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் துருவா வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது அவனது தங்கை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாள். தாய் வெளியே சென்றிருந்தார்.

இந்த நிலையில், வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு சிறுவன் துருவா தொங்கினான். அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த 8 வயது சிறுமியும் இதனை பார்த்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வெளியே சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மகனை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது செல்போன் பார்க்க கூடாது என்று பெற்றோர் கண்டித்ததுடன், படிக்கும்படி திட்டியதால் சிறுவன் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article