செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் பிடிபட்டார்: 2 பேருக்கு வலை

1 month ago 5

புழல்: செங்குன்றம் அருகே சாலையில் நடந்துசென்ற வடமாநில வாலிபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். செங்குன்றம் அடுத்து பலவாயல், ஜெய்துர்கா நகர் விரிவாக்கம் சோத்துப்பாக்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் குடோனில் தங்கி, 10க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு, தங்கியுள்ள வடமாநிலத்தை சேர்ந்த அஜ்மல் (17) என்பவர், நேற்று முன்தினம் இரவு சோத்துப்பாக்கம் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், அஜமல் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அப்போது இதனைகண்ட அப்பகுதி மக்கள், அவர்களை விரட்டிச்சென்று ஒரு வாலிபரை மட்டும் மடக்கிப் பிடித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு பாலவாயல், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த மதன் (20) என்பதும், இவருடன் சேர்த்து மொத்தம் 3 பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மற்ற 2 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் பிடிபட்டார்: 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article