
மும்பை,
இந்தி பட உலகின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சமீபத்தில் கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்துவிட்டதாக அதிர்ச்சி பதிவு ஒன்று வெளியிட்டு, சில நாட்களுக்குப் பின்பு தான் இறக்கவில்லை என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்தேன் என்றும் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
பலரது உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக அவர் மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே பூனம் பாண்டேவிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த பூனம் பாண்டேவை, ரசிகர் ஒருவர் அணுகி செல்பி வேண்டும் என்று கேட்டுள்ளார்.
பூனம் பாண்டேவும் சரி என்று சொல்ல அந்த நபர், செல்பி எடுப்பதுபோல பூனம் பாண்டேவை முத்தமிட முயற்சித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பூனம் பாண்டே அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.