செய்யாறு அருகே பட்டப்பகலில் துணிகரம்; வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டியை மிரட்டி நகை பறிக்க முயற்சி: நகைகளை ஜன்னல் வழியாக வீசி எறிந்ததால் தப்பியது

2 weeks ago 3

செய்யாறு, நவ.5: செய்யாறு அருேக வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிைய மிரட்டி நகை பறிக்க முயன்ற 2 பேரை ஒருமணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் மனைவி பாஞ்சாலை(80). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வெளியூரில் வசித்து வருகின்றனர். தனியாக வசித்து வரும் பாஞ்சாலை நேற்று மதியம் 12 மணி அளவில் வீட்டில் இருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாலிபர் வீட்டிற்கு வந்து திருமண பத்திரிக்கை கொடுக்க வந்துள்ளதாக மூதாட்டியிடம் கூறினார். பின்னர், உங்களது மகன் எங்கே, மகள் எங்கே என விசாரித்து, குடிக்க தண்ணீர் எடுத்து வரும்படி கூறினார். மூதாட்டி பாஞ்சாலை தண்ணீர் எடுத்து வருவதற்காக உள்ளே சென்றபோது, அந்த வாலிபர் திடீரென வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பால் போடச்சென்றார்.

உடனே சுதாரித்துக்கொண்ட பாஞ்சாலை, அந்த நபர் திருடதான் வந்திருக்கிறார் என உணர்ந்து, கழுத்தில் இருந்த செயினையும், காதில் அணிந்திருந்த கம்மலையும் பின்பக்க ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்து விட்டு சத்தம் போட்டுள்ளார். இதை பார்த்த அந்த வாலிபர், மூதாட்டி பாஞ்சாலை வாயில் துணியை அடைத்து, அங்கிருந்த அரிவாள்மனையை எடுத்து காட்டி, நீ அணிந்திருந்த நகை எங்கே? உள்ளே வைத்திருக்கும் நகைகளையும், பணத்தையும் எடுத்து வா என மிரட்டி உள்ளார். உடனே மூதாட்டி அவரது பிடியில் இருந்து நழுவி சென்று, வீட்டில் இருக்கும் பாத்திரங்களை ஜன்னல் வழியாக வீசி எறிந்து அக்கம்பக்கத்தினருக்கு சைகை செய்தார். சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை ஜன்னல் வழியாக பார்த்த வாலிபர், கதவை திறந்து கொண்டு அங்கிருந்து மறைவாக நிறுத்தி வைத்திருந்த பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டார்.

இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் மோரணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்தனர். ஜன்னல் வழியாக வீசப்பட்ட 3 சவரன் செயின், ஒரு சவரன் கம்மல் ஆகியவற்றை போலீசார் மீட்டுக்கொடுத்து மூதாட்டியிடம் விசாரித்தனர். அக்கம்பக்கம் வீடுகளிலும், அங்கிருந்த பெட்டிக்கடையிலும் விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில், மூதாட்டியை மிரட்டியது வெம்பாக்கம் தாலுகா, திருப்பனமூர் கிராமம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சக்திவேல்(23) என்பது தெரியவந்தது. உடனே அவரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் கூறியதாவது: கடந்த 3 மாதத்திற்கு முன்பு சுமங்கலி கிராமத்தில் உள்ள மூதாட்டி பாஞ்சாலை வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்தபோது, அவர் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டேன்.

இதுகுறித்து எனது நண்பர் பெருங்கட்டூர் காலனி பகுதி பூங்காவனம் தெருவை சேர்ந்த அஜித்(25) என்பவரிடம் கூறினேன். அவரும் நானும் சேர்ந்து மூதாட்டி பாஞ்சாலையிடம் நகை பறிக்க திட்டமிட்டோம். அதன்படி, இன்று(நேற்று) நான் ஊருக்கு வெளியில் நின்று இருந்தேன். மூதாட்டியிடம் நகைகளை பறிக்கச்சென்றது அஜித் என கூறினார். உடனடியாக பெருங்கட்டூர் சென்ற போலீசார், அஜித்தையும் மடக்கி பிடித்தனர். பின்னர், இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்கு பதிந்து அஜித், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு முயற்சியில் தொடர்புடைய இருவரையும் போலீசார் ஒருமணி நேரத்தில் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை சுமங்கலி கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

The post செய்யாறு அருகே பட்டப்பகலில் துணிகரம்; வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டியை மிரட்டி நகை பறிக்க முயற்சி: நகைகளை ஜன்னல் வழியாக வீசி எறிந்ததால் தப்பியது appeared first on Dinakaran.

Read Entire Article