செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை - அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்

3 weeks ago 6

சென்னை,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் இருவரை அலுவலக உதவியாளர்களாகப் பணி நியமனம் செய்து நியமன ஆணைகளை இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள், அறிவிப்புகள், அரசின் சாதனைகள், செய்தி வெளியீடுகள், அறிக்கைகள், வேண்டுகோள்கள் அனைத்தும் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அரும்பணிகளைத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த எஸ்.அன்பழகன் அவர்கள் கடந்த 5.10.2022 அன்று திருநெல்வேலி அரசுப் பொருட்காட்சியில் பணியிலிருக்கும்போது, இயற்கை எய்தினார். அவருடைய சட்டப்படியான வாரிசுதாரர்களில் ஒருவரான அவரது இளைய சகோதரர் எஸ்.குணாநிதி என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் இன்று (24.10.2024) பணி நியமன ஆணையை வழங்கினார்.

அதே போல, சென்னை ராஜாஜி மண்டபம் (ம) காந்தி மண்டபத்தில் தேர்வு நிலை தோட்டப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த ஜி.வரலட்சுமி கடந்த 4.1.2024 அன்று இயற்கை எய்தியதால், அவருடைய ஒரே மகனான டி.வி.பரமேஸ்வரராவ் என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணி நியமனம் வழங்கி உரிய நியமன ஆணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் இன்று (24.10.2024) வழங்கினார்.

பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்ட இருவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருக்கும் தங்களுடைய குடும்பங்களின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) மு.பெ.அன்புசோழன் மற்றும் கூடுதல் இயக்குநர் (செய்தி ச.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article