அலுவலகத்திலிருந்து கணவன் வந்ததும் மனைவி ஒரு திருமண அழைப்பிதழை எடுத்து நீட்டினாள்.அழைப்பிதழைப் படித்துப் பார்த்த கணவன், “என்னுடைய பெரியப்பா மகளுக்குத் திருமணம்” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்றவன் தடிமனான ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்தான்.“ஆரம்பிச்சிட்டீங்களா உங்க ஆராய்ச்சியை? இந்தப் பழக்கம் எப்பதான் உங்களை விட்டுப் போகுமோ?” என்று தலையில் அடித்துக் கொண்டாள் மனைவி.அந்தத் தடிமனான நோட்டுப் புத்தகத்தில் மொய் விவரங்கள் எல்லாவற்றையும் அவன் எழுதி வைத்திருந்தான். இவர்கள் வீட்டு விசேஷங்களிலும் திருமணம் போன்ற சுபகாரியங்களிலும் எந்தெந்த உறவினர்கள் என்னென்ன செய்தார்கள்; என்ன சைசில், என்ன விலையில் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன போன்ற விவரங்கள் எல்லாம் அதில் இருந்தன.
கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடியும் பெரியப்பாவின் பெயர் காணப்படவில்லை.
“உங்க பெரியப்பாவின் பெயரைத் தேடாதீங்க. பாவம் அவர் ரொம்ப கஷ்டத்தில் இருப்பவர். நம்ம வீட்டு விசேஷங்களுக்குக் கூப்பிட்ட மரியாதைக்கு வந்து வாயார வாழ்த்திட்டு ‘துஆ’ செய்து விட்டுப் போவார். அவரைப் போன்ற நல்லவர்களின் பிரார்த்தனையாலும் ஆசியாலும்தான் நாம இன்னைக்கு நல்லா வாழ்ந்துகிட்டு இருக்கோம். அவரு நமக்கு செஞ்சாதான் நாமும் அவருக்குச் செய்யணும்னு நினைக்காம உங்க ‘மொய் ஆராய்ச்சி நோட்டுப் புத்தகத்தை’ மூலையில் தூக்கிப்போட்டுவிட்டு அவருடைய மகள் கல்யாணத்துக்கு தாராளமா உதவுங்க” என்றாள் மனைவி.ஆனால், கணவன் கேட்கவில்லை. “நமக்கு செஞ்சா நாமும் செய்யலாம்; இல்லாட்டி ஏன் செய்யணும்? நாமும் அவர் பொண்ணு கல்யாணத்துக்குப் போயிட்டு ‘துஆ’ பண்ணிட்டு வந்துடலாம்” என்றான்.
நம்மில் பலரும் உறவுகளைப் பேணுவது இப்படித்தான். ஆனால், இஸ்லாமியத் திருநெறி இந்தச் செயலைக் கண்டிக்கிறது. நபிகள் நாயகம் அவர்கள் ஒருமுறை தெளிவுபடக் கூறினார்கள்: “பகரம் செய்யும் வகையில் உறவைப் பேணக்கூடியவன் முழுமையாக உறவைப் பேணக் கூடியவன் அல்லன். பிற உறவினர்கள் தொடர்பை அறுத்துக்கொண்டாலும் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுடைய உரிமையை நிறைவேற்றுபவனே முழுமையாக உறவைப் பேணுபவன் ஆவான்.”அதாவது, அவர்கள் நம்மிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால் நாமும் அவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொள்வது என்பது முழுமையான நன்னடத்தை ஆகாது. அவர்கள் நம்முடன் உறவைத் துண்டித்துக் கொண்டாலும் நாம் இணைந்தும் இணங்கியும் நடந்து கொள்வதுடன் உறவினர்களுக்குரிய உரிமைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதற்குப் பெயர்தான் உறவைப் பேணுதல் ஆகும்.
– சிராஜுல் ஹஸன்.
இந்த வாரச் சிந்தனை
“உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்துகொள்ளுங்கள்.” (குர்ஆன் 4: 36)
The post செய்தால் செய்வதுதான் உறவா? appeared first on Dinakaran.