*வாணியம்பாடியில் சங்கத்தினர் எதிர்ப்பால் பரபரப்பு
வாணியம்பாடி : செயின் பறிப்பு வழக்குகளில் கைதான 2 வாலிபர்கள் கொடுத்த தகவலின்பேரில் வாணியம்பாடி நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்த கர்நாடக போலீசார் அழைத்து சென்றனர்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் முகமதுசதாம் (23), நேதாஜி முத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் என்ற கரியன்(24). இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள சந்தப்பூரா பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதன்பேரில் கர்நாடக போலீசார் சில நாட்களுக்கு முன்பு இருவரையும் பிடித்து விசாரித்தனர். இருவர் மீதும் 9 இடங்களில் 13 தங்க செயின்களை பறித்ததாக வழக்குப் பதிந்து கைது செய்த
னர்.
விசாரணையில், இருவரும் தாங்கள் திருடும் தங்க செயின்களை திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து, கர்நாடக மாநில போலீசார் ைகதான இருவரையும் அழைத்து கொண்டு நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடிக்கு வந்தனர். டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர்கள், உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
பின்னர், கைதான இருவர் கூறிய நகைக்கடைக்காரர்கள் 2 பேரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். திடீரென அவர்களில் ஒரு நகைக்கடைக்காரரை கர்நாடகாவுக்கு அழைத்து சென்று விசாரிக்க அம்மாநில போலீசார் ஜீப்பில் ஏற்றினர்.
இதையறிந்த நகைக்கடை மற்றும் அடகுக்கடை உரிமையாளர் சங்கத்தினர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.அப்போது, நகைக்கடைக்காரரை கர்நாடகாவுக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து உள்ளூரிலேயே விசாரிக்கும்படி கூறினர். இருப்பினும் கர்நாடக போலீசார் அந்த நகைக்கடைக்காரரை அழைத்து சென்றனர்.
இதனால் நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் விடியவிடிய காத்திருந்தனர். கர்நாடகாவில் விசாரணை முடிந்து தகவல் தெரிவிப்பதாகவும் அம்மாநில போலீசார் உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வாணியம்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post செயின் பறிப்பு வழக்குகளில் 2 பேர் கைது நகைக்கடை உரிமையாளரை விசாரிக்க அழைத்து சென்ற கர்நாடக போலீஸ் appeared first on Dinakaran.