சென்னை: ஆஸ்திரேலியாவில் நேற்று (6ம் தேதி) முதல் நாளை வரை நடைபெறும் 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ள தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு சிட்னி நகருக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார். சிட்னி நகரில் நேற்று டார்லிங் ஹார்பர் சர்வதேச மாநாட்டு மையத்தில் 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு தொடங்கியது. மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த “பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு-வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் இந்தியா உள்பட பல்வேறு காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற, சட்டமன்ற பேரவை தலைவர்கள் கலந்துகொண்டு, சுருக்கமாக கருத்துகளை தெரிவித்தனர்.
இதில் தமிழ்நாடு கிளை சார்பாக பேரவை தலைவர் அப்பாவு பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்கள் எளிதாக கிடைப்பதால், சில நேரங்களில் தவறான தகவல்கள் மற்றும் தவறான செய்திகள் பரவுவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ‘செயற்கை நுண்ணறிவு’ பயன்பாடு வெளிப்படையானதாகவும், உண்மைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். இந்த சிறப்புமிக்க மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என்றார். முன்னதாக, பேரவைத்தலைவர் அரசு முறைப் பயணமாக மலேசிய நாட்டிற்கு சென்றிருந்தார். மலேசியா நாடாளுமன்றத்தின் தலைவர் ஜோஹாரி அப்துல், துணை அமைச்சர் குலசேகரன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து, மலேசியா நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்தில் இருந்து அப்பாவு பார்வையிட்டார். அப்போது மலேசியா நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் வருகை குறித்து அறிவித்ததும், உறுப்பினர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
The post ‘செயற்கை நுண்ணறிவு’ பயன்பாடு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்: காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பேச்சு appeared first on Dinakaran.