பாரீஸ்: ‘‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது. ஆனால் வேலையின் தன்மை மாறுகிறது. அதற்கேற்ப மக்களின் திறனை மேம்படுத்த முதலீடுகள் அவசியம்’’ என பாரீசில் நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி 3 நாள் அரசு முறைப்பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதற்கட்டமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றடைந்த அவர், அங்கு நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு(ஏஐ) உச்சி மாநாட்டில் நேற்று பங்கேற்றார்.
இம்மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை அதிபர் ஜாங்க் குவோகிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலக தலைவர்களும், தகவல்தொழில்நுட்ப துறையின் ஜாம்பவான்களும் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பார்த்து மிகவும் அச்சப்படும் விஷயம் வேலை இழப்பு தான். ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது.
வேலைகளின் இயல்பு மாறுகிறது. அதன் தன்மை மாற்றம் அடைகிறது. புதிய வகையான வேலைகள் உருவாக்கப்படுகின்றன. எனவே ஏஐ எதிர்காலத்திற்காக நமது மக்களின் திறன்களை மேம்படுத்த அதிக முதலீடுகள் அவசியம். இந்த நூற்றாண்டின் மனித குலத்திற்கான கோடிங்கை ஏஐ எழுத தொடங்கி விட்டது. அது மற்ற தொழில்நுட்பங்களை விட மிகவும் வித்தியாசமானது. ஏற்கனவே ஏஐ நமது அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை மாற்றி வடிவமைத்து வருகிறது.
அதனை சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பலவற்றில் மேம்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற ஏஐ உதவும். நிலையான வளர்ச்சி இலக்குகளை எளிதாகவும் விரைவாகவும் எட்டக்கூடிய உலகத்தை உருவாக்க இது உதவும். இதைச் செய்ய வளங்களையும், திறமைகளையும் ஒன்றிணைக்க வேண்டும். நம்பிக்கை, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் ஓபன் சோர்ஸ் அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.
140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் நாங்கள் மிகக் குறைந்த செலவில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். இது திறந்த மற்றும் அணுகக் கூடிய நெட்வொர்க்கை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. பொது நலனுக்காக நாங்கள் ஏஐ அப்ளிகேஷன்களை உருவாக்கி வருகிறோம். எங்களிடமும் உலகின் திறன்வாய்ந்த மிகப்பெரிய ஏஐ குழுக்கள் உள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையிலான பக்கசார்பற்ற பெரிய மொழி மாடலை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
இது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கக் கூடியதாக இருக்கும். டிஜிட்டல் வர்த்தகத்தை ஜனநாயகமாகவும் அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றியுள்ளோம். இந்தக் தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தேசிய ஏஐ திட்டத்தின் அடித்தளமாகும். ஏஐ எதிர்காலம் நன்மை அளிப்பதாகவும், அனைவருக்குமானதாகவும் அமைய, இந்தியா தனது அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளது.
இதற்கு முன் எப்போதுமில்லாத வகையில், ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. வேகமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எல்லைகளைக் கடந்து ஆழமான ஒன்றையொன்று சார்ந்திருத்தல் உள்ளது. எனவே, ஏஐ தொழில்நுட்பத்தை அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும். அதற்கு நமது பொதுவான மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கும், அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கும், நம்பிக்கையை வளர்ப்பதற்கும் உலகளாவிய கூட்டு முயற்சிகள் தேவை. உலகளாவிய ஏஐ தொழில்நுட்ப தரநிலைகள், மேலாண்மை விதிகள், கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் போட்டி போட்டு வரும் நிலையில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டை பிரான்சுடன் இணைந்து இந்தியா இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
* அதிக கட்டுப்பாடுகள் அமெரிக்கா எதிர்ப்பு
செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு, பொதுவான, அனைவரையும் உள்ளடக்கிய, நெறிமுறை சார்ந்த அணுகுமுறையை உறுதியளிக்கும் சர்வதேச தீர்மானம் பாரீஸ் ஏஐ உச்சி மாநாட்டில் கொண்டு வரப்பட்டது. இதில் பிரான்ஸ், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கையெழுதிட்ட நிலையில், அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைய மறுத்து விட்டன. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ‘‘வளர்ச்சிக்கு ஆதரவான ஏஐ கொள்கைகளுக்கு பாதுகாப்பை விட அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதிகப்படியான கட்டுப்பாடுகள் வளர்ச்சியை பாதிக்கும்’’ என்றார்.
* அடுத்த உச்சிமாநாடு இந்தியாவில் நடக்கும்
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘அடுத்த ஏஐ உச்சி மாநாட்டை இந்தியா நடத்தப் போவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநாட்டில் ஏஐ பவுண்டேஷன் மற்றும் நிலையான ஏஐக்கான கவுன்சில் ஆகியவற்றை அமைத்ததற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். அவரது முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் என உறுதி அளிக்கிறேன். ஏஐக்கான உலகளாவிய ஒத்துழைப்பு உண்மையிலேயே உலகளாவியதாக இருக்க வேண்டும். அது உலகளாவிய தெற்கு மற்றும் அதன் முன்னுரிமைகள், கவலைகள் மற்றும் தேவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்’’ என்றார்.
* அமெரிக்க துணை அதிபருக்கு பாராட்டு
மாநாட்டிற்கு முன்பாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு தனது அரண்மனையில் சிறப்பு இரவு விருந்து அளித்தார். அங்கு வந்த பிரதமர் மோடியை, அதிபர் மேக்ரான் கட்டித்தழுவி வரவேற்றார். தனது நண்பர் மேக்ரானை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி என பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற ஜே.டி.வான்சை முதல் முறையாக பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். அப்போது தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்காக தனது பாராட்டுக்களை பிரதமர் மோடி தெரிவித்தார்.
The post செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது: திறன்களை வளர்க்க முதலீடு அவசியம் பாரிசில் நடந்த சர்வதேச ஏஐ மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.