
சென்னை மாநகருக்கும், அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர் உள்ளது. இந்த ஏரியில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், மருத்துவமனை கழிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உள்ளிட்ட கழிவுகளும் இந்த ஏரியில் கலக்கிறது என்று செய்தி வெளியானது.
அந்த செய்தியில், ஏரியின் நீர்வரத்து கால்வாய்களான கிருஷ்ணா கால்வாய், பங்காரு கல்வாய், சவுத்திரி கால்வாய் வழியாக அதிக அளவில் கழிவு நீர் ஏரியில் கலப்பதாகவும், தமிழக அரசின் நீர்வளத்துறையினர், இதனை கண்காணித்து தடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் கூறியிருந்தது.
இந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் அமர்வு, செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பி இதற்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசு, இருங்காட்டுக் கோட்டை சிப்காட் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டனர். விசாரணையை ஜூலை 15-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.