சென்னை,
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவன் என்பவர், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய தனது நண்பரை அழைத்துச் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்துள்ளார். பின் தனது நண்பரை அழைத்துக் கொண்டு மீண்டும் ஆந்திராவுக்கு திரும்பிச் சென்றுள்ளார். அந்த காரில் 4 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் 400 கிலோ வாட் திறன் கொண்ட மின்சார வயர்களை பதிப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. காரில் பயணித்த 4 பேரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், காருக்குள் இருந்தவர்களை உடனடியாக மீட்டனர். இந்த சம்பவத்தில் 4 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிரேன் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சாலையோரம் இருந்த பள்ளத்திற்கு அருகே தடுப்புகள் முறையாக அமைக்கப்படாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பகுதியில் மெட்ரோ ரெயில் கட்டுமானம் முடிந்து அதன் அருகிலேயே மின்சார வயர் பதிப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் சாலை மிகவும் குறுகளாக இருப்பதாகவும், தடுப்புகளை சரியான முறையில் வைக்காததே இந்த விபத்திற்கு காரணம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.