சென்னையில் மழை தொடங்கி மூன்று நாட்கள் வரை ஆகிவிட்டது; எடப்பாடி பழனிசாமி எங்கே..? அமைச்சர் சேகர்பாபு கேள்வி!

3 months ago 18

சென்னை: சென்னையில் மழை தொடங்கி மூன்று நாட்கள் வரை ஆகிவிட்டது; எடப்பாடி பழனிசாமி எங்கே..? என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சென்னையில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய கனமழை நேற்று முழுவதும் நீடித்தது. இதனால் சாலைகள் முழுக்க மழைநீர் தேங்கியது. ஆனாலும், தமிழக அரசின் தரப்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு மோட்டார் மூலம் மழை தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் இன்று காலை பெரும்பாலான இடங்களில் நீர் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியது. அதே சமயம் மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக தமிழக அரசை விமர்சனம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு, மக்களை ஏமாற்றும் நாடகங்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில், சென்னை துறைமுகம் பகுதி மக்களுக்கு பால், ரஸ்க் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து, பாரீஸ் கார்னரில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; தாழ்வான பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் 17 செ.மீ அளவுக்கு மழை பெய்தாலும் தண்ணீர் வடிந்துவிட்டது. மின்சாரம், பால் மற்றும் உணவு விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை. எல்லையில் ராணுவ வீரர்கள் மக்களை காப்பதற்கு போராடுகிறார்க்ளோ அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு பகல் பாராமல் களத்தில் மக்களை காக்க போராடி வருகிறார்.

சென்னையில் மழை தொடங்கி மூன்று நாட்கள் வரை ஆகிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்காவது தரையில் பட்டுள்ளதா? மழை பாதித்த ஏதாவது ஒரு பகுதிக்குச் சென்று ரெட்டியோ, பாலோ, பிஸ்கட்டோ வழங்கினாரா? முதலில் அதிமுகவில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடட்டும். பிறகு அரசு வெள்ளை அறிக்கை வெளியிடும் என்று கூறியுள்ளார்.

 

The post சென்னையில் மழை தொடங்கி மூன்று நாட்கள் வரை ஆகிவிட்டது; எடப்பாடி பழனிசாமி எங்கே..? அமைச்சர் சேகர்பாபு கேள்வி! appeared first on Dinakaran.

Read Entire Article