
சென்னை,
தலைநகர் சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கவும் பிங்க் நிற ஆட்டோ சேவை தொடங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார். இந்த திட்டத்தின்கீழ் அரசு மானியமாக தலா ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதில், "ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருக்க வேண்டும். அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை இருக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னையில் பிங்க் நிற ஆட்டோ சேவை மகளிர் தினமான வருகிற 8-ந் தேதி தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.