
துபாய்,
8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றிருந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் துபாயில் நாளை நடைபெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றது. வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. அதே நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்தது என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டி வரும். 2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ளது.
ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் 2 முறை சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியுள்ளது. அந்த அணி 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் லாகூரில் நடைபெறும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.