சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 50 மின்சார ஆட்டோக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (13.3.2025) முகாம் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் “காலநிலை வீரர்கள்” திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை வழங்கி, கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
மேலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் இணைய தளத்தின் மூலம், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான தீர்வுகளை வழங்கிடும் முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்து, தங்களுக்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள, தமிழ்நாடு புதுமைத் தொழில் முனைவோர் திட்டத்தின் (Sustain TN) இணைய முகப்பை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடலோர தமிழகத்திற்கான உயிர்க்கேடய வரைபடங்கள், பாரம்பரிய மீள்திறனுக்கான வேர்கள் பழங்குடியினரும் காலநிலை மாற்றமும், நிலையான வாழ்விடத்திற்கான சிறந்த நடைமுறைகள் ஆகிய தலைப்பிலான 3 புத்தகங்களையும் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பசுமை உட்கட்டமைப்புகளை முழுமையாக செயல்படுத்தியுள்ள திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த என். பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைப் பாராட்டி தலைமையாசிரியர்களிடம் பசுமைப் பள்ளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக, துணை முதலமைச்சர் காலநிலை வீரர்கள்” திட்ட மின் ஆட்டோக்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த, காலநிலையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பார்வையிட்டார். முதலமைச்சர் காலநிலை மாற்றத்தால் தமிழ்நாடு பாதிக்கப்படாமல் பாதுகாத்திட பல்வேறு முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தி வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், மாற்று பயன்பாட்டு பொருட்கள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் சுய உதவிக்கு குழு உறுப்பினர்களைக் கொண்ட “காலநிலை வீரர்கள்” என்ற புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 8.3.2025 அன்று தலா ரூ.4.83 லட்சம் மதிப்புள்ள 50 மின் ஆட்டோக்களை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கி விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இரண்டாவது கட்டமாக இன்று துணை முதலமைச்சர் தலா ரூ.4.83 லட்சம் மதிப்புள்ள 50 மின் ஆட்டோக்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வழியனுப்பினார். இந்த மின் ஆட்டோக்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் இயற்கை சிற்றுண்டிகளை விற்பனை செய்திடவும், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மேலும் இந்த மின் ஆட்டோக்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அதிநவீன மைக், ஒலி பெருக்கி அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக பல பகுதிகளுக்கு சென்று ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்தவும், மஞ்சள் பை, மக்கும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட டம்ளர், பாக்குமட்டை தட்டு, மரக் கரண்டிகள், மறுசுழற்சி அட்டையால் செய்யப்பட்ட தட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு விழப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்நிகழ்வின் போது, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை இயக்குநர் ஆ.ர ராகுல்நாத், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்.ஸ்ரேயா பி சிங், இ.ஆ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் முனைவர் எம்.ஜெயந்தி, இ.வ.ப., தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவித்திட்ட இயக்குநர் விவேக்குமார். இ.வ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் . ஆர்.கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post சென்னையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 50 மின்சார ஆட்டோக்களை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.