சென்னை: தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்ேபாது கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சென்னை வந்துள்ளார். நேற்று இரவு சென்னை வந்த அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் வரவேற்றனர். இந்நிலையில் சென்னையில் தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பாஜக மாநில மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி, வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுக-பாஜக கூட்டணி உருவானதை தொடர்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பாஜகவினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஜே.பி.நட்டாவின் வருகையை முன்னிட்டு பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புறக்கணித்து விட்டார். இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை: கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்ல உத்தரவு அண்ணாமலை புறக்கணிப்பு appeared first on Dinakaran.