நியூயார்க்: கடந்த 40 ஆண்டில் 20,000 இந்தியர்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா கூட்டத்தில் இந்திய பிரதிநிதி கூறினார். நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதி தூதர் பர்வதநேனி ஹரீஷ் பேசுகையில், ‘பாகிஸ்தானை பொருத்தமட்டில் அந்த நாட்டிற்கு தீவிரவாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் வித்தியாசம் பார்க்காத நாடாகும். கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதல் முதல், ஏப்ரலில் நடந்த பஹல்காம் தாக்குதல் வரை, இந்தியாவின் முன்னேற்றத்தையும், மன உறுதியையும் தாக்குவதே பாகிஸ்தானின் நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தத் தாக்குதல்களால் இந்தியாவின் பொருளாதாரமும், மக்களின் மன உறுதியும் பாதிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து இந்திய எல்லைக் கிராமங்களை தாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், 20க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றதுடன், 80க்கும் மேற்பட்டோரை காயப்படுத்தினர். கோவில்கள், குருத்வாராக்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்க முயன்றனர். ஆனால் இதற்கு பதிலடியாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை, தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. எனவே பொதுமக்களைப் பாதுகாப்பது குறித்து ஐ.நா-வில் பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை. கடந்த 40 ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத் தாக்குதல்களால் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன’ என்று குற்றம் சாட்டினார்.
The post ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்; 40 ஆண்டில் 20,000 இந்தியர்கள் பலி: பாகிஸ்தான் மீது இந்திய பிரதிநிதி காட்டம் appeared first on Dinakaran.