சென்னை,
சென்னை சைதாப்பேட்டை, சின்ன மவுண்ட், வாத்தியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் குமார் (வயது 52). அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று மாலை மகாகவி பாரதிநகரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தார். அண்ணா வளைவு பஸ் நிறுத்தத்தில் வேலூரைச் சேர்ந்த கோவிந்தன் (53) என்பவர் அந்த பஸ்சில் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினார். அப்போது அவர், குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பஸ்சின் பின்பக்க இருக்கையில் அமர்ந்து இருந்த கண்டக்டர் ஜெகன்குமார், பயணி கோவிந்தனிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறினார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த கண்டக்டர் ஜெகன்குமார், கையில் வைத்திருந்த டிக்கெட் கொடுக்கும் எந்திரத்தால் கோவிந்தன் தலையில் அடித்ததாகவும், இதில் அவரது தலையில் காயம் அடைந்து ரத்தம் கொட்டியதாகவும் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தன், கண்டக்டர் ஜெகன் குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் கண்டக்டர் ஜெகன்குமார் ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்தார். இதனால் டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பஸ்சை நிறுத்திய டிரைவர், 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்டக்டர் ஜெகன் குமார் பரிதாபமாக இறந்தார். கோவிந்தன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.