
சென்னை நந்தனம் அண்ணா சாலையில் 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் இன்று திடீரென குலுங்கியதால், அதில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். மேலும், அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உடனடியாக சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து நில அதிர்வு ஏற்பட்டதா? அல்லது வதந்தியா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாசாலையில் பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் லேசான அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ரிக்டரில் பதிவாகாத அளவுக்கு சென்னையில் நில அதிர்வு வருவது வழக்கம்தான் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.