சென்னை: செயின் பறிப்பு கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தார். சென்னையில் 7 இடங்களில் நகை பறிப்பு சம்பவம் கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் (26) என்பவரை அழைத்து சென்ற போது போலீசை தாக்கி விட்டு தப்ப முயற்சித்துள்ளார்.
தரமணி ரயில் நிலையம் அருகில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அவர் உயிரிழந்தார். மேலும் சென்னையில் நேற்று காலை தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பிய சல்மான் என்பவர், நேற்று மாலை நெல்லூர் அருகே சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட நிலையில், சென்னை அழைத்துவந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் பிடிபட்ட நிலையில், இதில் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன், தப்பி ஓடும் முயற்சியில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னையில் நேற்று 7 இடங்களில் நடந்த செயின் பறிப்பு சம்பவங்களில் மூளையாக செயல்பட்டது ஜாபர் எனவும் கொள்ளையன் ஜாபர் மீது 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளது எனவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2021-ல் மராட்டிய போலீசால் தேடப்பட்ட செயின் பறிப்பு ஈரானிய கொள்ளையர்களில் முக்கியமானவன் ஜாபர். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செயின் பறிப்பதில், ஜாபர் கைதேர்ந்தவர். நேற்று நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் அனைத்திலும் பைக்கை ஓட்டிச் செல்பவர் ஜாபர் குலாம் ஹூசைன் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான ஜாஃபர் குலாம் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 7 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீசார் நேற்று கைது செய்தனா். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீசார் கைது செய்தனா்.
சென்னையில் காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின் 4வது என்கவுன்டர் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு appeared first on Dinakaran.