சென்னையில் ஒரு லக்கி பாஸ்கரி..! 2 வருடத்தில் ரூ 1.73 கோடி அபேஸ் ஈசியாக பணத்தை சுருட்டியது எப்படி ? திகைத்து நின்ற நிறுவன உரிமையாளர்

3 weeks ago 6
லக்கி பாஸ்கர் பட பாணியில் சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் தலைமை கணக்காளராக பணிபுரிந்த பெண், ஒரு கோடியே 73 லட்சம் ரூபாயை சுருட்டிய சம்பவம் அறங்கேறி உள்ளது. பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு தலைமறைவானவரை போலீசார் மடக்கிப்பிடித்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய்குமார், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். தங்கள் நிறுவன தலைமை கணக்காளராக பணிபுரிந்த சாந்தி என்பவர் இரண்டே ஆண்டுகளில் ஒரு கோடியே 73 லட்சம் ரூபாயை கையாடல் செய்திருப்பதை ஆடிட்டிங் மூலம் கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் வேலையை மெயில் மூலமாக ராஜினாமா செய்த சாந்தி பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக விஜய்குமார் கூறி இருந்தார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சாந்தியை ஓசூரில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் லக்கி பாஸ்கர் சினிமாவிற்கே முன்னோடியாக அவர் மெகா மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. 12 வருடமாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சாந்தி மீது நம்பிக்கை வைத்த விஜய்குமார், ஊழியர்களுக்கு சம்பளம் போடுவது, வங்கிகணக்குகளை நிர்வகிப்பது, உள்ளிட்டவற்றை அவர் பொறுப்பிலேயே விட்டுள்ளார். வங்கியில் இருந்து வரக்கூடிய ஓடிபி எல்லாம் தனது செல்போனுக்கு வரும் வகையில் சாந்தி மாற்றிக் கொண்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் 600 ஊழியர்களின் வங்கிக்கணக்குடன், தூத்துக்குடியில் உள்ள உறவினர்கள் 10 பேரின் வங்கி கணக்கையும் திருட்டுத்தனமாக உள்ளே சேர்த்துள்ளார். ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் வங்கி கணக்கில் ஊதியம் செல்லும் போது, சாந்தியின் உறவினர்களின் வங்கி கணக்கிற்கும் பணம் சென்றுள்ளது. உறவினர்களை தொழிலாளர்கள் போல கணக்கு காட்டி நிறுவனத்தின் தொகையில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக மாதம் 7 லட்சம் ரூபாய் வரை மோசடியாக சுருட்டியது தெரியவந்துள்ளது. உறவினர்களிடம் இருந்து பணத்தை தனது மகன், மற்றும் மகளின் வங்கி கணக்கில் திரும்ப பெற்றுள்ளார் சாந்தி. மொத்தமாக தனது பிள்ளைகளிடம் பணம் இருந்தால் சந்தேகம் வரும் என்பதால் பணம் சேர்ந்ததும் வீடுகளாகவும், அசையா சொத்துகளாகவும் வாங்கிப்போட்டுள்ளார். அந்தவகையில் பெரம்பலூரில் இரு வீடுகளும், அடையாறில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு தாய் பெயரில் ஒரு வீடும் வாங்கியதாகவும் , தனது மகனையும், மகளையும் பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்க வைத்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கை சமர்ப்பிக்கும் போது வங்கி ஸ்டேட்மெண்டையே போலியாக தயாரித்து நிறுவனத்தில் இருப்பவர்களை ஏமாற்றியது ஆடிட்டிங்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான நம்பிக்கையால் கணக்குகளை கையாள சாந்திக்கு மாதம் 60 ஆயிரம் சம்பளம் வழங்கியதுடன், குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கட்டணம் செலுத்தி வந்துள்ளார் நிறுவன உரிமையாளர். அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு தலைமறைவான சாந்தி தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
Read Entire Article