சென்னையில் இன்று கவிஞர் வைரமுத்து பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பங்கேற்பு

6 hours ago 3

சென்னை: கவிஞர் வைரமுத்து பன்னாட்டு கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தொடங்கி வைக்கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் மொழிபெயர்த்த ‘வைரமுத்துவின் மகாகவிதை’ என்ற ஆங்கில நூலை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட, மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ மு.சரவணன் பெற்றுக்கொள்கிறார். மாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிறைவுரை ஆற்றுகிறார். கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை தொகுத்து ‘வைரமுத்தியம்’ என்ற ஆய்வுக்கோவை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பாரத் பல்கலைக்கழக வேந்தர் எஸ்.ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொள்கிறார். கவிஞர் வைரமுத்து ஏற்புரையாற்றுகிறார்.

கவிஞர் வைரமுத்துவின் 50 ஆண்டுகால இலக்கியப் படைப்புகளை அறிஞர் உலகம் ஆய்வு செய்கிறது. இந்திய பல்கலைக்கழக பேராசிரியர்களும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கிறார்கள். இந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் வைரமுத்து கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரை நூல்களையும் அவர் எழுதிய 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களையும் உலக அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து கட்டுரை வாசிக்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, சீனா, துபாய் போன்ற நாடுகளிலிருந்தும் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்கின்றனர். கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

The post சென்னையில் இன்று கவிஞர் வைரமுத்து பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article