வடகிழக்கு பருவமழைக் காலம் வந்தாலே, சென்னை மாநகர மக்களுக்கு வெள்ள பாதிப்பு அச்சம் வந்துவிடுகிறது. 2015-ல் புறநகர் பகுதிகளில் பெய்த மழை சென்னைக்குள் வந்ததால் வெள்ளம் ஏற்பட்டது, 2023-ல் மிக்ஜாம் புயல் சென்னை அருகே நகராமல் நின்றுவிட்டதால் வெள்ளம் ஏற்பட்டது என ஒவ்வொரு முறையும் புதுப்புது காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. அப்போது மக்களும் உடைமைகள் இழப்பு, உணவு, குடிநீர் இன்றி தவிப்பு போன்ற பிரச்சினைகளை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ரூ.100 கோடியில், மாநகரில் வெள்ள பாதிப்பை குறைக்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் 2 ஆயிரத்து 624 கிமீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் மூலமாகவே வடிகின்றன. இந்த மழைநீர் வடிகால்கள் அனைத்தும் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் ஓட்டேரி நல்லா கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் உள்ளிட்ட 33 கால்வாய்களில் இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 33 கால்வாய்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இவற்றில் மழைநீர் இயல்பாக வழிந்தோடினாலே மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும்.