சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கிராண்ட்மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வருகிற 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடக்கிறது. இதில் கிராண்ட்மாஸ்டர்ஸ் போட்டியில் அர்ஜூன் எரிகைசி (இந்தியா), லெவோன் அரோனியன் (அமெரிக்கா), மேக்ஸ்மி வாசிர் லாக்ரவி (பிரான்ஸ்), விதித் குஜராத்தி (இந்தியா), பர்ஹாம் மக்சோட்லோ (ஈரான்), அலெக்ஸ் சரணா (செர்பியா), அமின் தபதாபாய் (ஈரான்), அரவிந்த் சிதம்பரம் (இந்தியா) ஆகியோரும், சேலஞ்சர்ஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் ரானக் சத்வானி, அபிமன்யு புரனிக், கார்த்திகேயன் முரளி, லியோன் லுக் மென்டோன்கா, வி.பிரணவ், எம்.பிரனேஷ், ஹரிகா, வைஷாலி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். 7 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி (கிளாசிக்கல்) ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும்.
கிராண்ட்மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.15 லட்சமும், 2-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும். சேலஞ்சர்ஸ் போட்டியில் முதலிடத்தை பிடிப்பவருக்கு ரூ.6 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். அத்துடன் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் கிராண்ட்மாஸ்டர்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவார். 2-வது இடத்தை பெறுபவருக்கு ரூ.4 லட்சம் பரிசாக அளிக்கப்படும்.