சென்னையில் 22 சுரங்கப்பாதைகளிலும் சீரான போக்குவரத்து; 2 நாட்களில் 2.42 லட்சம் பேருக்கு உணவு: மாநகராட்சி அறிக்கை

1 month ago 5

சென்னை: சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல பகுதிகள் நீரில் சூழ தொடங்கியது. எனினும், தமிழ்நாடு அரசின் முன்னெடுப்புகளாலும், தடுப்பு நடவடிக்கைகளாலும், நிலைமை 24 மணிநேரத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்; மழையின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 79 மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் உள்ளன. தற்போது நிவாரண மையங்களில் எவரும் இல்லை. நேற்று முன்தினம் முதல் இன்று இரவு 7 மணி வரை 15,50,535 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களிலும் நேற்று முதல் இன்று இரவு 7 மணி வரை 242,000 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது.

நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 539 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்தினை முன்னிட்டு, பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் இன்று 210 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில் 13,680 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. 15ம் தேதி முதல் இன்று இரவு 7 மணி வரை 12108 நடைகள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சென்னையில் 22 சுரங்கப்பாதைகளிலும் சீரான போக்குவரத்து; 2 நாட்களில் 2.42 லட்சம் பேருக்கு உணவு: மாநகராட்சி அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article