சென்னை, ஏப்.29: சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2024 முதல் 2025 எப்ரல் மாதம் வரையிலான காலத்தில் 1005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 747 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2024 ஜனவரி முதல் 2025 ஏப்ரல் மாதம் வரையில் 1005 வழக்குகள் பதிவு செய்து, விசாரணையில் நிலுவையில் இருந்த 948 வழக்குகளின் விசாரணையை முடித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 747 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் பிற மாநிலங்களில் இருந்து தொடர் நடவடிக்கையின் மூலம் 11 இணைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்டதாக 88 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மேலும், பல முக்கிய வழக்குகளில் நீதிமன்ற விசாரணை முடிவடைந்து 121 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. தலைமறைவாக இருந்த குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 707 பிடியாணை நிறைவேற்றப்பட்டன. மத்திய குற்றப்பிரிவில் 8,145 பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரித்து, அவற்றில் 6,023 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 54 போலி பாஸ்போர்ட் ேமாசடி வழக்கில் தேவகோட்டை மெட்ரோ ஸ்டியோ உரிமையாளர் நல்லா முகமது மற்றும் மதுரை சாய் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் உரிமையாளர் சதீஷ்குமார் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் மூலம் ரூ.2.75 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மோசடி செய்த வழக்கில் ஜெய, நந்தகிஷோர், கீதா, அபிஷேக் கிருஷ்ணா ஆகிய 4 பேர் மீது விசாரணை முடித்து நீதிமன்றம் மூலம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தரப்பட்டது.
அமெரிக்கா தூதரகத்தில் இருந்து பெற்றப்பட்ட புகாரின் படி டெலிகிராம் மூலம் குழந்தை பாலியல் துன்புறுத்தல் படங்களை பரப்பிய குற்றவாளி முகமது பில்லால் காலேடி என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதேபோல், அமெரிக்கா குடிமகளுக்கு இணையவழி மூலம் பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கிப்ட் ஜெசுபாலன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். எனவே இதுபோன்ற பல்வேறு மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குற்றவாகளை கைது செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 11.44 லட்சம் வழக்குகள் பதிவு: ரூ.8.28 கோடி அபராதம் வசூல்
சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பெருநகர காவல் எல்லையில் கடந்த 2024ம் ஆண்டு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுநர்கள் மற்றும் பின் அமர்ந்து பயணித்தவர்கள் மீது மொத்தம் 11,44,922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.8.28 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்து விதிமீறல்களை பதிவு செய்ய 60 சந்திப்புகளில் 77 தானியங்கி பதிவெண் கண்டுபிடிக்கும் கேமராக்கள் (ஏஎன்பிஆர்) நிறுவப்பட்டு இ-சலான் இணையதளம் மற்றும் இடைமறிப்பான் மூலமாக தானாகவே அபராதம் கட்டண சீட்டுகள் உருவாக்கப்படுகின்றன.
ஒருவழிச்சாலையில் பயணிப்பது, ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து செல்வது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணிப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை கேமராக்கள் பதிவு செய்கின்றன. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு நிலுவையிலுள்ள இ-சலான்கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு உதவுவதற்காக 12 சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சேவை மையங்கள் மூலம் மொத்தம் ரூ.24.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னையில் 2024 முதல் 2025 ஏப்ரல் மாதம் வரை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த 1005 வழக்குகளில் 747 பேர் கைது: சென்னை போலீஸ் தகவல் appeared first on Dinakaran.