சென்னையில் 10,000 அதிநவீன இலவச கழிவறைகள்: பராமரிப்பு சரியில்லை எனில் புகார் அளிக்கலாம்

3 months ago 23

சிறப்பு செய்தி
சென்னை பெருமாநகராட்சியானது, பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. குறிப்பாக, மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும் உள்ளது. இந்நிலையில், தற்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிவறைகளை நவீன முறையில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே, பொதுசுகாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் சென்னை மாநகராட்சி, தற்போது கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக சென்னை மாநகராட்சி, தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் கழிவறைகளை கட்டி, அதனை பராமரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது, மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 4 கட்டங்களாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மண்டலம் 5, 6 மற்றும் 9 ஆகிய பகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக மண்டலம் 1, 2, 3, 4 ஆகிய பகுதிகளிலும், மூன்றாம் கட்டமாக மண்டலம் 7, 8, 9, 10 ஆகிய பகுதிகளிலும், நான்காவது கட்டமாக மண்டலம் 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளிலும் அதிநவீன முறையில் கழிவறைகள் கட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற்கட்டமாக பணிகள் நடக்கும் 3 மண்டலங்களில் மொத்தம் 372 இடங்களில் 3270 கழிவறைகள், 3 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதற்காக ₹430 கோடி சென்னை மாநகராட்சியால் ஒதுக்கப்பட்டது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 9 ஆண்டுகள் அதாவது ஓராண்டு கட்டுமானத்திற்கும், 8 ஆண்டுகள் பராமரிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்டுமானத்திற்காக 40 சதவீத நிதியும், பராமரிக்க 60 சதவீத நிதியும் அளிக்கப்பட உள்ளது. இந்த பணி சென்னை மாநகராட்சியின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின் இந்த முதற்கட்ட கழிவறைகள் அமைக்கும் பணிகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்தகட்டமாக சென்னையில் ₹1,167 கோடியில் சுமார் 1002 இடங்களில் கழிவறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அக்டோபர் 16ம் தேதி மதியம் 3 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

ஏற்கனவே முதற்கட்டமாக மண்டலம் 5,6, மற்றும் 9ல் பணிகள் முடிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது கட்டமாக மண்டலம் 1, 2, 3, 4 ஆகிய பகுதிகளில் ₹350.39 கோடியும், மூன்றாம் கட்டமாக மண்டலம் 7, 8, 9, 10 ஆகிய பகுதிகளில் ₹443.69 கோடியும், நான்காவது கட்டமாக மண்டலம் 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் ₹373.11 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்டலம் 1 முதல் 4 வரை கழிவறைகள் அமைக்க முதற்கட்டமாக ₹52.15 கோடி சென்னை மாநகராட்சியானது ஒப்பந்ததாரருக்கு கொடுக்கும். பின்னர் பராமரிப்புக்கென வருடத்திற்கு ₹ 30.13 கோடி என ஒப்பந்தம் முடியும் வரை 350.19 கோடி கொடுக்கப்படும். இதேபோல் மண்டலம் 7 முதல் 10 வரை முதற்கட்டமாக ₹50.15 கோடியும், வருடத்திற்கான பராமரிப்பு செலவு ₹40.37 கோடியும், மொத்தமாக ₹443.69 கோடியும் சென்னை மாநகராட்சி கொடுக்கும். மண்டலம் 11 முதல் 15 வரை முதற்கட்டமாக ₹46.27 கோடி, வருட பராமரிப்பு ₹ 33.37 கோடி, மொத்தம் ₹373.11 கோடி சென்னை மாநகராட்சி கொடுக்கும். இந்த பணிகள் அனைத்தும் அடுத்த வருடம் முழுவதுமாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

சென்னை மாநகராட்சியின் இந்த முதற்கட்ட முயற்சி வெற்றிபெற்றதையடுத்து, இதை முன்னோட்டமாக வைத்து தமிழ்நாடு முழுவதும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக கோவை மற்றும் திருச்சியில் அடுத்த 2 மாதங்களுக்குள் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் புதிதாக அதிநவீன முறையில் கழிவறைகள் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இதனை கணினி மயமாக்கப்பட்ட கண்ட்ரோல் ரூம் அமைப்பு மூலம் மேற்பார்வை செய்து மக்கள் பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆக, அடுத்தாண்டுக்குள் சென்னையில் சுமார் 10,000க்கும் அதிகமான கழிவறைகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் பொதுமக்களுக்கு வசதியாக, மாநகராட்சி சார்பில் இலவச அதிநவீன கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் கட்டப்பட்டு வரும் கழிவறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இதற்காக 9 ஆண்டுகள் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு முகம் சுளிக்காத வகையில் பணிகள் இருக்கும். இந்த கழிவறைகளில் ஏதாவது சிறிய பிரச்னைகள் என்றால் கூட, அதாவது குழாய் உடைந்திருந்தாலோ, கழிவறை உடைந்திருத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால் ஒப்பந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த பிரச்னை சரிசெய்யும் வரை நாள் ஒன்றுக்கு ₹1000 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல், குறிப்பிட்ட கால நேரத்திற்குள் கழிவறைகள் கட்டப்படவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு ₹4000 அபராதம் விதிக்கப்படும். ஏற்கனவே குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரரிடம் ₹30 லட்சத்துக்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இந்தாண்டிற்குள் முடிவடையும்,’’ என்றனர்.

26கழிவறைகளை பராமரிக்க நிபந்தனைகள்
கழிவறைகளை அமைக்கவும், அதனை பராமரிக்கவும் மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, அனைத்து கழிவறைகள், வாஷ் பேசின்கள் சுத்தமாக இருக்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் வசதி இருக்க வேண்டும். கழிவறை கதவுகள், தரைகள் போன்றவை எந்த சேதமும் இல்லாமல் எப்போதும் இருக்க வேண்டும். குழாயில் இருந்து தண்ணீர் ஒரு சொட்டு வீணாகாமலும், கழிவுகள் நிரம்பி வெளியே வராமலும் இருக்க வேண்டும்.

எல்லா கழிவறைகளிலும் கண்ணாடி சுத்தமாக இருக்க வேண்டும். சோப் மற்றும் கை கழுவுவதற்கான பொருட்கள் இருக்க வேண்டும். கால் துடைக்க துணி இருக்க வேண்டும். தேவையான ஊழியர்கள் இருக்க வேண்டும். எப்போதும் தூய்மை பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு புரியும் வகையில் பொதுக் கழிவறை என எழுதப்பட வேண்டும். புகார் தெரிவிக்க இடம் அமைக்க வேண்டும். சுவரின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் சுவரொட்டி ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சானிட்டரிநாப்கின்கள் இருக்க வேண்டும். குப்பை தொட்டிகள் இருக்க வேண்டும். சிசிடிவி இருக்க வேண்டும் போன்ற 26 விதிமுறைகளை பின்பற்ற ஒப்பந்ததார்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

The post சென்னையில் 10,000 அதிநவீன இலவச கழிவறைகள்: பராமரிப்பு சரியில்லை எனில் புகார் அளிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article